இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். குஜராத் அணியின் கேப்டன் கில் 31 ரன்கள் குவிக்க ஓரளவு சவாலான ஸ்கோரினை எட்டியது குஜராத் அணி.
பின்னர் 169 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒரு முனையில் நிதானமாக நின்று விளையாட, மறுமுனையில் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினர். நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள், பிராவிஸ் 46 ரன்களும் குவித்தனர். பின்னர் ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்க பின்னால் வந்த வீரர்கள் சொற்பரன்களில் வெளியேறி மும்பை அணியை தோல்வி அடையச் செய்தனர்.
ஒரு கட்டத்தில் 5 ஓவர்களில் 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், குஜராத் அணியின் சுழற் பந்துவீச்சினால் மும்பை அணி அடங்கிப்போனது. மற்றும் இறுதி கட்டத்தில் மோஹித் ஷர்மா மற்றும் உமேஷ்யாதவ் சிறப்பாக பந்து வீசியதால் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அணியின் கேப்டன் கில் கூறுகையில்
” பதட்டமான சூழ்நிலையில் எங்கள் அணியினர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாம் பாதியில் பனிப்பொழிவின் காரணமாக பந்து வீசுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டு மும்பை அணியை கட்டுப்படுத்தி விட்டனர்.
சாய் சுதர்சன் இந்த போட்டியில் மிக அற்புதமாக பேட்டிங் செய்தார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம். எனவே மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உருவாக்கி அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருந்தோம். இறுதிக்கட்டத்தில் ரன்கள் வராத காரணத்தினால் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்கள். அதுவே எங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம்.
இருப்பினும் இந்த போட்டியில் நன்றாக செயல்பட்டு வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இங்குள்ள ரசிகர் கூட்டம் எங்களுக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்” என்று கூறியிருக்கிறார். மும்பை அணியை விட குஜராத் அணி சற்று வலு குறைவாக இருந்த போதிலும் அந்த அணியின் ஒற்றுமையே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மேலும் சொந்த மைதானத்தில் குஜராத் அணிக்கு இந்த வெற்றி புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது. அதே நேரத்தில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணி செய்த தவறுகளை திருத்தி அடுத்த போட்டியில் வலுவாக கம் பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

