இந்தியன் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் குறித்த விஷயங்களைக் கிரிக்கெட் விமர்சகர்களும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பேசி வரும் நிலையில் தென்னாப்பிரிக்க வீரரும் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான ஏபி டிவில்லியர்ஸ் தனது ஐபிஎல் பார்வையை முன் வைத்திருக்கிறார்.
தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் கீப்பராக திகழ்ந்த ஏபி டிவில்லியர்ஸ் தமது பேட்டிங் மூலம் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் மட்டுமல்ல உலக ரசிகர்களையே கவர்ந்தவர். அவர் அடிக்கிற ஒவ்வொரு ஷாட்களும் ஒவ்வொரு தனித்துவம் பெறும். டி20 கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு நாள் கிரிக்கெட்டில் டி20 ஷாட்கள் விளையாட கூடியவர்.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய இவர், பின்னர் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அதன் பிறகு அவருக்கு தொட்டதெல்லாம் உச்சம் என்பது போல அவரது பேட்டிங்கின் மூலம் உலகப் புகழ் அடைந்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் அதிரடியின் உச்சம் என்று குறிப்பிட்டால், ஏபி டிவிலியர்ஸ்ன் அதிரடி ‘உன்னத அழகியல்’.
‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் இவர், விளையாடும் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு, ஒரு விருந்தாகவே அமையும். இப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற அவர் அவரது யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார்.
இது ஐபிஎல் சீசன் என்பதால் ஐபிஎல் குறித்து பேசி இருக்கிற டிவில்லியர்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த இந்திய அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார். வரும் ஐபிஎல்லில் அவரது அதிரடியை காண மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் இது குறித்து அவர் கூறுகையில்
“ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்வதை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. எனக்கு இப்போதே மிகவும் ஆவலாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய இவர் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடுவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. எனவே அவரது அதிரடியைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கிடைத்த நம்பிக்கை டி20 தொடருக்கு எடுத்து வருவார்.
அவரிடமிருந்து பட்டாசுகளை எதிர்பார்க்கும் நான் குறைந்தபட்சமாக 500 ரன்கள் அல்லது அதிகபட்சமாக 600 ரன்கள் இந்த சீசனில் அடிப்பார்” என்று கூறியிருக்கிறார். பல முன்னணி கிரிக்கெட் பிரபலங்கள் இந்த முறை அதிக ரன் அடித்தவர் பட்டியலில் ஜெய்ஸ்வாலே இருப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், டிவில்லியர்சும் அதே கருத்தை கூறியிருக்கிறார்.

