இந்தியாவில் நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி, டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே வேளையில், ஆண்கள் ஆர் சி பி அணியைக் கிண்டல் செய்து மீம்ஸ்களை பரப்பி வருகின்றனர்.
கடந்த வருடம் பெண்களுக்காக தனியே டி20 கிரிக்கெட் லீக் தொடர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பெங்களூர் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு பெங்களூர் அணிக்கான எதிர்பார்ப்பு எகிறியது.
காரணம் ஐபிஎல் தொடரில் 16 வருடங்களாக விளையாடி வரும் பெங்களூர் அணி, இதுவரை ஒரு கோப்பையைக் கூட கைப்பற்றியதில்லை என்ற சோகம் நீடித்தது. இதனால் பெண்கள் அணியாவது அதனை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், முதல் சீசனில் லீக் சுற்றோடு வெளியேறியது. எனினும் இரண்டாவது சீசனில் அணியில் உள்ள குறைகளைக் களைந்து வெற்றிகரமாக இரண்டாவது சீசனில் பங்கு பெற்று பெங்களூர் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
நாக் அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆன மும்பை அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னறிய போதே பெங்களூர் அணியின் மீது ஒரு நம்பிக்கை தென்பட்டது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆண்கள் அணி சாதிக்க முடியாததை பெண்கள் அணி சாதித்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நல்லவிதமான பாராட்டுக்கள் வந்தாலும், சில ரசிகர்கள் தரப்பில் ஆண்கள் ஆர்சிபி அணியைக் கிண்டல் செய்தும், விராட் கோலியையும், மந்தனாவையும் கம்பேர் செய்து மீம்ஸ்களைக் குவித்து வந்தனர். இவர்கள் இருவரையும் கம்பேர் செய்து ஒப்பிட்டுப் பார்க்க முடியாத கேலி கிண்டல்களை சமூக வலைதளத்தில் பரப்பி வந்தனர்.
எனவே இது குறித்துப் பேசிய பெண்கள் ஆர்சிபி அணியின் கேப்டன் மந்தனா
“கிரிக்கெட்டில் டைட்டில் வெல்வது என்பது ஒரு விஷயம் மட்டுமே. ஆனால் விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய சாதனைகள் படைத்து இருக்கிறார். எனவே தொழில்முறை அடிப்படையில் என்னையும் அவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் தவறானது. அவர் இந்திய கிரிக்கெட்டின் ரோல் மாடல்.
அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய ஒரு வீரராக இருக்கிறார். எனவே என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. ஒரு சாம்பியன் பட்டம் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்காது. நாங்கள் அனைவரும் விராட் கோலியை மதிக்கிறோம். நான் 18ம் நம்பர் கொண்ட ஜெர்சி அணிந்து இருக்கிறேன்.
இதனால் என்னையும் அவரையும் ஒப்பிட்டால் நான் அவர் ஆகி விட முடியாது. ஜெர்சி நம்பர் தேர்வு செய்வது எல்லாம் அவரவர் விருப்பம். எனவே விராட் கோலி கிரிக்கெட்டில் இன்னமும் மதிக்கப்பட வேண்டிய வீரர்” என்று கூறி இருக்கிறார்.

