ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி அக்சர் படேல், ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது.
சஞ்சு சாம்சன் காயம்
இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சாம்சன் – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். இதன்பின் வந்த ரியான் பராக் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் மற்றும் ராணா இருவரும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.
ஜெய்ஸ்வால் 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் ஸ்பின்னர்களை சிக்சர், பவுண்டரி என்று விளாசிய ராணா 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
சூப்பர் ஓவர் சம்பவம்
மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் ஜுரெல் – ஹெட்மயர் இருவராலும் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது, ஜுரெல் 1 ரன் எடுத்து ரன் அவுட்டாகினார். இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதன்பின் சூப்பர் ஓவரை வீச மீண்டும் மிட்சல் ஸ்டார்க் வந்தார். அந்த ஓவரில் ஹெட்மயர் தவறால், ரியான் பராக் மற்றும் ஜெய்ஸ்வால் ரன் அவுட்டாகினார்.
இதனால் ராஜஸ்தான் அணி 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. இதன்பின் களமிறங்கிய கேஎல் ராகுல் – ஸ்டப்ஸ் கூட்டணி சந்தீப் சர்மா வீசிய 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதனால் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

