2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற இருக்கும் நிலையில், இனி அவரது பேட்டிங்கை காண்பது சந்தேகம்தான் என்று சிஎஸ்கே தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, அணிக்காக இதுவரை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்திருக்கிறார். இக்கட்டான சூழ்நிலைகளிலும் தனது துல்லியமான கேப்டன்சியால் பல போட்டிகளை வென்று கொடுத்தவர்.
தற்போது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள தோனி கீப்பிங்கில் புலியாக பாய்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கரை அவுட் ஆக்க அவர் அடித்த டைவ் கேட்ச் அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.
பல இளம் விக்கெட் கீப்பர்களுக்கே சவால் விடும் வகையில் கீப்பிங்கில் இன்னும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் பேட்டிங்கில் இன்னும் அவரை காண முடியவில்லை என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் இருக்கின்றனர். காரணம் சென்னை அணி கொண்டிருக்கும் மிக வலுவான பேட்டிங் வரிசை. சென்னை அணியில் களமிறங்கும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 ரன்களே அடித்தாலும் குறைவான பந்துகளில் அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாட வலியுறுத்தி செல்கிறது. உதாரணமாக ஓப்பனிங் களமிறங்கும் இரட்சின் ரவீந்திரா முதல் கடந்த போட்டியில் கடைசியாக களமிறங்கிய சமீர் ரிஸ்வி வரை அதிக ஸ்டிரைக்ரேட்டிலேயே விளையாடுகின்றனர்.
மேலும் இம்பாக்ட் பிளேயர் விதியின் மூலம் ஏழாவது இடத்தில் சிவம் துபே களம் இறங்குவதால் இதற்கு முன்னர் ஏழாவது இடத்தில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி எட்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறார். இருப்பினும் அவர் விரும்பினால் சிஎஸ்கே நிர்வாகம் அவரை முன்னரே அனுப்பவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது நன்றாக சென்று கொண்டிருக்கும் பேட்டிங் வரிசையை கெடுக்க வேண்டாம் என்று நினைத்து அந்த விஷயத்தில் மட்டும் தோனி தெளிவாக இருப்பதாக சிஎஸ்கே வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் மேலும் பேட்டிங்கை வலுப்படுத்த பார்க்கிறார் என்று மைக் ஹசி தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்கலாமே:ஒவ்வொரு தடவையும் ஆர்சிபியை ஜெயிக்கணும்.. ஒருமுறை கூட கோப்பையை வாங்கல ஆனா.. கம்பீர் சர்ச்சை கருத்து
இருப்பினும் வாய்ப்பு கிடைத்தால் சென்னை அணி பிளே ஆப் தகுதி பெற்று சில ஆட்டங்கள் எஞ்சி இருப்பின் அப்போது களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் மட்டுமே அதுவும் நடைபெறும். இல்லையென்றால் மகேந்திர சிங் தோனி களமிறங்குவது சந்தேகம்தான். இதனால் தற்போது தோனியின் பேட்டிங்கை காண முடியாத நிலையில் ரசிகர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.

