ஐபிஎல் தொடருக்கான கடைசி லீக் சுற்று போட்டிகள் மே 17ம் தேதி முதல் தொடங்க உள்ளது. மே 17 முதல் ஜூன் 3 வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்த சீசனை பொறுத்தவரை சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் எந்த பரபரப்பும் இல்லாமல் நிதானமாக உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்
ஏனென்றால் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் பலரும் சொந்த ஊர் சென்றுவிட்டனர். மே 29 முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் தொடங்க உள்ளது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு மே 30 முதல் தொடங்க உள்ளது.
இதனால் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடருக்காக இந்திய திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை 2 வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடருக்கு திரும்ப மாட்டார்கள் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறி இருக்கிறார்.
2 வீரர்கள்
அதில் காசி விஸ்வநாதன் சொல்லும் போது, இங்கிலாந்து அணிக்காக ஆடி வரும் சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய 2 வீரர்கள் மட்டுமே மீண்டும் ஐபிஎல் தொடர் விளையாடுவதற்காக இந்திய வர மாட்டார்கள். அதிலும் ஜேமி ஓவர்டன் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாம் கரண் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை என்றாலும், அவர் சொந்த காரணங்களுக்காக விளையாட வரவில்லை. சாம் கரணின் முடிவினை சிஎஸ்கே அணி நிர்வாகம் மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியில் இருந்து 2 வீரர்களை மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

