இந்தியாவில் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் அணிக்காக தற்போது சிறப்பாக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சென்னை சேப்பாக்கம் மைதானம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன் ரைஸர் ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையில் ஹைதராபாத் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.
அதில் தமிழகத்தில் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது சிறந்த பந்துவீச்சின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் அபாரமாக பந்து வீசி தனது முத்திரையை பதித்தார்.
அதன் பிறகு காயம் காரணமாக தொடர்ந்து அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு சில சீசனங்களில் தடுமாறி வந்த நடராஜன் இந்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே வரும் உலக கோப்பைக்கு இவரை நிச்சயம் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடராஜன் தனது தொடக்க கால அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் சென்னை மைதானத்தில் தன்னை உள்ளே அனுமதிப்பார்களா? என்றும் நானெல்லாம் விளையாடுவேனா?என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
” ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும்போது சிதம்பரம் மைதானத்தை பார்ப்பேன்.
அப்போது இந்த மைதானத்திற்குள் நம்மை விளையாட அனுமதிப்பார்களா? நானெல்லாம் இங்கு விளையாடுவேனா? என்று நினைத்து பார்த்து இருக்கிறேன். ஊருக்கு செல்லும் பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியை பார்த்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு இங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதனை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது டி20 உலக கோப்பையில் பங்கு பெற பும்ராவிற்கு பிறகு தரமான வேகப் பந்துவீச்சாளராக நடராஜன் இருக்கிறார். இறுதிக்கட்ட ஓவர்களில் தனது துல்லியமான யார்க்கர் பந்துகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். எனவே இனிவரும் உலகக் கோப்பையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் தன்னை நிரூபிக்க தயாராக இருப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

