இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் டெல்லி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்தார்.
வருண் சக்கரவர்த்தி முதலில் தமிழகத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் கொல்கத்தா அணியில் நுழைந்தார். பின்னர் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் மூன்று போட்டிகளில் விளையாடினார். பின்னர் இவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரில் விளையாட இடம் பிடித்தார்.
அப்போது இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சகால் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இல்லை. ஆனால் இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரில் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி லீக் சுற்றிலேயே வெளியேறியது. வருண் சக்கரவர்த்தியும் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதன் பின்னர் சிறிய காயத்தினை சந்தித்து சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடினார். ஆனால் அத்தொடரில் அவரால் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணியிலும் இவருக்கான இடத்தை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் சிறிய காயம் அடைந்த தன்னை பெரிய காயம் அடைந்து விட்டதாகக் கூறி இந்திய அணியிலிருந்து தம்மை ஓரங்கட்டி விட்டதாக சமீபத்தில் கூறியிருக்கிறார்.
இது குறித்து வருண் சக்கரவர்த்தி கூறியதாவது
“உலகக்கோப்பை முடிந்தவுடன் நான் சிறிய காயம் அடைந்தேன். இரண்டு, மூன்று வாரங்களிலேயே நான் உடற்தகுதி அடைந்து விட்டேன். அதன் பிறகு எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மக்களும் நான் காயமடைந்து விட்டதாகவே நினைத்து விட்டனர்.
ஆனால் இச்செய்தி வதந்தியா? அல்லது வேண்டுமென்றே யாரோ பரப்பி விட்ட சதியா? என்று தெரியவில்லை. அவர்கள் இப்படி ஓரங்கட்டி விட்டனர். இது முற்றிலும் நியாயமற்றது. ஆனால் இதுதான் வாழ்க்கை. 2022 ஐபிஎல் சீசன் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஏனென்றால் 2021 உலகக்கோப்பைக்கு பிறகு நடந்த மாற்றங்கள் எனக்குத் தெரியும்.
நான் திரும்பவும் இந்திய அணியில் விளையாட ஆசைப்பட்டேன். அதனால் என்னை நிரூபிக்க எனது பந்துவீச்சில் நான் சில மாற்றங்களை செய்தேன். ஆனால் எனக்கு அது சரியாகக் கை கொடுக்கவில்லை. எனது மன அமைதியை இது குலைத்தது. என்னால் சாதாரணமாகப் பந்து வீச முடியவில்லை. நான் பிறகு சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொண்டு என்னுள் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்று புரிந்து கொண்டேன். இனி நான் விரக்தி அடைய மாட்டேன். என் வழியில் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் நான் சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

