இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. தற்போது தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி தனது 500வது விக்கெட்டை வீழ்த்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியிலிருந்து பாதியில் விலகி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவுலியின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
இந்த வெற்றியினை அவர் கொண்டாடி வரும் நேரத்தில் குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக மூன்றாவது போட்டியில் இருந்து அஸ்வின் விலகியுள்ளார் என்ற செய்தியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. அஸ்வினுக்கு தேவையான எந்த வித உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும், மேலும் தங்களது முழு ஆதரவினை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று நாட்கள் விளையாட வேண்டிய நிலையில் தற்போது அஸ்வினின் விலகல் இந்திய அணிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. அதாவது ஐசிசி யின் விதிகளின்படி போட்டியின் நடுவில் ஒரு வீரர் பாதியில் இருந்து விலகினால் அவருக்கு மாற்று வீரர் களம் இறங்கலாம்.
ஆனால் அவர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ அவருக்கு அனுமதி கிடையாது. அதாவது இந்திய அணி 10 வீரர்களைக் கொண்டு மட்டுமே பேட்டிங் மற்றும் பந்து வீச முடியும். இவர் கேப்டன் ஆகவும் செயல்படக்கூடாது ஆனால் நடுவர்களின் ஒப்புதல் படி விக்கெட் கீப்பராக வேண்டுமானால் செயல்பட முடியும்.
ஆனால் தற்போது புதிய ஐசிசி விதிகளின்படி, கோவிட்-19 அல்லது மூளை அதிர்ச்சி பாதிக்கப்பட்ட வீரருக்கு பதிலாக களமிறங்கும் மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீச அனுமதி உண்டு. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் தற்போது அஸ்வினின் விலகல் இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டாக்ஸ் 7 ரன்களிலும், தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் 152 ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.

