ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்ற பின் சிறப்பாக விளையாடி சதம் அடித்த வில் ஜேக்ஸ் பற்றி விராட் கோலி கூறி இருக்கிறார்.
குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் கில் 16 ரன்கள் குவித்து வெளியேற, தமிழக வீரர் சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். மேலும் மற்றொரு வீரரான ஷாருக் கான் 58 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் குஜராத் அணி 200 ரன்கள் குவித்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணிக்கு டூ ப்ளஸ்சிஸ் 24 ரன்களில் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் கூட்டணி மிக அபாரமாக விளையாடி 16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்களும் வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்களும் குவித்தார். இதில் 10 சிக்சர்கள் அடங்கும்.
எனவே இந்த வெற்றிக்குப் பின்னர் அபாரமாக விளையாடி சதம் விளாசிய வில் ஜேக்ஸ் குறித்து விராட் கோலி கூறும் பொழுது
“வில் ஜேக்ஸ் களமிறங்கிய போது ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட முடியாததால் சற்று எரிச்சல் அடைந்தார். இதனால் நான் அவரிடம் சற்று பொறுமையாக இருக்கும்படி கூறினேன். அவர் பொறுமையாக விளையாடி பின்பு அதிரடியாக ஆட்டத்தை மாற்றினால் எப்படி வெடித்து சிதறுவார் என்று அனைவருக்குமே தெரியும். இதனால் சற்று பொறுமையாக இருக்கும் படி கூறினேன்.
வில் ஜாக்ஸ் பேட்டிங் செய்ய மறுமுனையில் நான் அவரது அதிரடி ஆட்டத்தை நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் 19 ஓவர்களில் வெற்றி பெறுவோம் என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தேன். ஆனால் வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாடி பதினாறு ஓவர்களிலே ஆட்டத்தை முடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது.
எனவே இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும்போது பேட்டிங்க்கு சாதகமாகவே மாறியது. 15 வருடங்களாக இந்த வேலையை தொடர்ந்து செய்வதற்கு காரணம் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் எங்களை ஆதரிக்கும் ரசிகர்களுக்காகவும் சுயமரியாதைக்காகவும் விளையாட விரும்புகிறோம். எனவே எஞ்சியுள்ள போட்டியிலும் வெற்றி பெற கடுமையாக உழைப்போம்.
இதையும் படிங்க:100 ரன்.. 41 பந்து.. வில் ஜாக்ஸ் அபார சதத்தால் வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி
மக்கள் ஸ்ட்ரைக் ரேட் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நமது ஆட்டம் என்ன, அதை எப்படி சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று நமக்கு மட்டுமே தெரியும். அதனை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதும் தெரியும். தொடர்ந்து உழைத்து சிறப்பாக வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார்

