இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 209 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக கில் 34 ரன்களும், பட்டிதார் 32 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணித் தரப்பில் ஆண்டர்சன், பஷீர், ரேஹான் அகமத் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது. பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜேக் கிராவ்லி 76 ரன்கள் குவித்தார். அபாரமாக பந்து வீசிய பும்ரா 6 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியின் 95வது ஓவரில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. 95 வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீச வரும்போது அதனை தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்.
ஆண்டர்சன் பந்தை வீச, கிரீஸ் கோட்டிற்கு அருகில் வரும் போது மறுமுனையில் நான் ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்த அஸ்வின் மைண்ட் கேம் விளையாட முயற்சித்துத் தனது கையை நீட்ட, இதனை சற்றும் எதிர்பாராத ஆண்டர்சன் ஓடி வந்து பந்து வீசுவதை நிறுத்தினார். இதனால் சற்று அதிருப்தி அடைந்த ஆண்டர்சன் அம்பையரிடம் அஸ்வின் ஸ்டெம்ப்களுக்கு மிக அருகில் இருப்பதாக முறையிட்டார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அஸ்வின் எதிர்பாராத விதமாக ஆண்டர்சன் பந்துவீச்சிலேயே 20 ரன்களுக்கு தனது விக்கெட்டைப் பறி கொடுத்தார். இதனைக் கண்ட வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன் அஸ்வினின் இச்செயல் ஆண்டர்சனுக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். மற்றொரு வர்ணனையாளரான தினேஷ் கார்த்திக் அஸ்வின் தனது மைண்ட் கேமை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.
தற்போது தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கி இருக்கும் இந்திய அணி 28 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இரண்டாவது நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி பெரிய ஸ்கோரை இலக்காக வைக்க முயற்சிக்கும். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

