இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இங்கிலாந்து மண்ணில் 2-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன்பின் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணிக்கு சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி?
இதன் மூலமாக சூர்யகுமார் யாதவிற்கு பின் இந்திய டி20 அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்படுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கும் சுப்மன் கில் நியமனம் செய்யப்படும் போது, விராட் கோலியை போல் அனைத்து வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே டி20 கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நிரந்தர வீரராக இருப்பதால், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மட்டும் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமனம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. சுப்மன் கில்லின் வேலைப்பளுவை குறைப்பதற்கான முடிவாகவும் பார்க்கப்பட்டது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பேசும் போது, ரோகித் சர்மாவுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சியை ஸ்ரேயாஸ் ஐயரிடம் கொடுப்பதற்கு எந்த திட்டமும் இல்லை. இதற்கு மேல் ஆலோசிக்கவோ, பதில் அளிக்கவோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு பிசிசிஐ அலுவலர் பேசும் போது, ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் சராசரி 59ஆக இருக்கிறது. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே சுப்மன் கில் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டை நீண்ட ஆண்டுகளுக்கு கையில் எடுக்க வயதும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

