ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 ரன்னில் தோல்வியை சந்தித்துள்ளது. 214 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த போதும், 19 ஓவர்கள் வரை சிஎஸ்கே அணியின் கைகளே ஓங்கி இருந்தது. ஆனால் கடைசி ஓவரில் தோனி 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும், யாஷ் தயாளின் யார்க்கர்களும் சிஎஸ்கே அணி தோல்வியடைய காரணமாக மாறியது.
தோனி பேட்டி
இந்த தோல்வி தொடர்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசும் போது, நான் களமிறங்கிய போது, 3 ஓவர்களில் சுமார் 35 ரன்களே தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் சில சிக்சர்களை விளாசி அழுத்தத்தை குறைத்திருக்க வேண்டும். இந்த தோல்விக்கான பொறுப்பு என்னுடையதுதான். என் மீது தான் தவறு சொல்ல வேண்டும். பேட்டிங்கின் போது ஆர்சிபி அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது.
ஆனால் எங்களின் பவுலர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தனர். இறுதியில் ரொமாரியோ ஷெப்பர்ட் சிறப்பாக ஃபினிஷிங் செய்தார். பவுலர்கள் வீசும் ஒவ்வொரு பந்திலும் அதிக ரன்களை அவரால் எடுக்க முடிந்தது. எங்கள் அணி பவுலர்கள் கூடுதலாக யார்க்கர்களை வீச பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளாசும் போது, யார்க்கர்கள் மட்டுமே ஒரே ஆயுதம்.
யார்க்கர் பந்துகள்
இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் யார்க்கர் பந்துகள்தான். ஒருவேளை யார்க்கர் பந்துகள் வீச முடியவில்லை என்றால், லோ-ஃபுல்டாஸ் தான் அடுத்த வாய்ப்பு. அந்த பந்துகளை அவ்வளவு எளிதாக ரன்கள் சேர்க்க முடியாது. பதிரானா போன்ற ஒரு பவுலருக்கு யார்க்கர் வீச முடியவில்லை என்றால், மாற்று திட்டத்திற்கு செல்ல வேண்டும்.
அவரிடம் நல்ல வேகம் உள்ளது. பவுன்சர் வீசலாம். பேட்ஸ்மேன்களை சர்ப்ரைஸ் செய்ய வேண்டும். சில நேரங்களில் யார்க்கர் பந்துக மிஸ்ஸாகும் போது, அது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக ரன்கள் குவிக்க கூடிய பந்தாக மாறிவிடும். அதனால் டி20 கிரிக்கெட்டில் வித்தியாசமான பந்துகளை வீச பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் எங்களின் பேட்ஸ்மேன்கள் ஸ்கூப், பேடில் ஷாட்களை ஆடுவதில்லை. ஜடேஜா ஆடினாலும், அவரின் வலிமை டவுன் தி கிரவுண்ட் தான் என்று தெரிவித்துள்ளார்.

