சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – மும்பை இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி தீபக் சஹரின் புண்ணியத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டும் சேர்த்தது.
சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா – ராகுல் திரிபாதி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் தீபக் சஹர் பவுலிங்கில் ராகுல் திரிபாதி 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.
அவர் களமிறங்கிய உடன் போல்ட் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாச, தீபக் சஹர் பவுலிங்கில் சிக்ஸ் அடித்து மிரள வைத்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், மும்பை பவுலர்களை பொளந்து கட்டினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 62 ரன்களாக உயர்ந்தது. பின்னர் ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வரப்பட, ருதுராக் எளிதாக ரன்களை குவித்தார்.
அதிரடியாக ஆடிய அவர் 22 பந்துகளில் அரைசதம் அடிக்க, பின் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிவம் துபே 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து தீபக் ஹூடா வந்தார். அவரும் 3 ரன்களில் வெளியேற, சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரண் 4 ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக ரச்சின் ரவீந்திரா விக்னேஷ் புத்தூர் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக ஆடிய அவர் 42 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே இருந்த போது, ஜடேஜா 17 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் தோனி களமிறங்கினார். பின்னர் ரச்சின் சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார்.

