நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மாலை கொல்கத்தா மைதானத்தில் தொடங்கவுள்ளது. 18வது சீசனின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்குகிறது. இதனால் ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு முதல் நாளிலேயே எகிறி இருக்கிறது.
சுனில் கவாஸ்கர் கணிப்பு
இதனிடையே ஐபிஎல் தொடரை இந்த சீசனில் யார் கைப்பற்றுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதனடிப்படையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கணிப்பினை வெளியிட்டு இருக்கிறார். அதில் இதுவரை ஐபிஎல் தொடர் வரலாற்றில் கோப்பையை வெல்லாத அணி வெல்லும் என்று கணித்துள்ளார்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் லக்னோ ஆகிய 4 அணிகள் தான் கோப்பையை வென்றதில்லை. இதனால் சுனில் கவாஸ்கர் கூறும் போது, இம்முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார். அதேபோல் ஆர்சிபி, ஐதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று கணித்திருக்கிறார்.
ஆரஞ்ச் கேப் யாருக்கு?
அதேபோல் ஆரஞ்சு கேப்பினை ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா கைப்பற்றுவார் என்றும், பர்பிள் கேப்பினை பும்ரா கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எம்விபி விருதினை ஐதராபாத் அணியின் கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரில் ஒருவர் வாங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். சுனில் கவாஸ்கரின் கணிப்புகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், முதல் சீசனிலேயே ரஜத் பட்டிதர் ஆர்சிபி அணியின் வரலாற்றை மாற்றுவார் என்று சுனில் கவாஸ்கர் கூறி இருப்பது அவரது செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

