இந்தியன் பிரீமியர் லீகின் 18வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு வருடமும் ரசிகர்களுக்கு பரபரப்பையும் உற்சாகத்தையும் கொடுக்கும் ஐபிஎல் திருவிழா, இந்த முறையும் புதிய சாதனைகளுடன் தொடங்க உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த சீசனைப் பற்றிய சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த சீசனைப் பார்த்தால், பல போட்டிகளில் 200 – 250 ரன்களை அணிகள் சுலபமாக குவித்தன. சில போட்டிகளில் 300 ரன்களுக்கு மிக அருகே சென்று திரும்பின, குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அணுகுமுறை. இந்த ஆண்டும் அதே போல் அதிரடியை எதிர்பார்க்கலாம் என்பது ரசிகர்களின் எண்ணம். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஷுப்மன் கில் அண்மையில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” டி20 கிரிக்கெட் வேகமாக மாறி வருகிறது. இந்த ஐபிஎலில் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கப்படுவதைப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். 300 ரன்கள் சாத்தியம் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வீரர்களுக்கும் ஒரு புதிய இலக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்க்கு காரணம், இம்பாக்ட் பிளேயர் விதி தான். இதனால் போட்டி மேலும் சுவாரஸ்யமாக்குகிறது,” என்றார்.
கில் மேலும் பேசுகையில், இந்தத் தொடரில் அவரது தலைமைப் பொறுப்பு பற்றி பேசினார். ” நான் பேட்டிங் செய்யும் போது, கேப்டனாக என்னை நினைப்பதை விட, ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பேட்டிங்கில் கேப்டன்ஷிப் பற்றி யோசித்தால், என் ஆட்டம் பாதிக்கப்படுகிறது. ஆனால், பீல்டிங்கில் தலைமை முக்கியம். அங்கு அணியை ஒருங்கிணைத்து திட்டமிட வேண்டும். கடந்த சீசனில் சில சமயங்களில் மனதில் குழப்பம் ஏற்பட்டதால் என் ஆட்டத்தை பாதித்தது. இப்போது அதைத் தனித்தனியாக பிரித்து கையாள கற்றுக் கொண்டேன் ” என்று நம்பிக்கையாகப் பேசினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி, மார்ச் 25 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர்களது சொந்த மண்ணான அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. கடந்த சீசனில் கில்லின் தலைமையில் பிளேஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுத்திப் பெறத் தவறிய குஜராத் அணி இம்முறை பட்லர், கில், பிலிப்ஸ், ரஷீத், ரபாடா, சிராஜ் ஆகிய நட்சத்திர பாட்டாளதுடன் ஒரு கலக்கு கலக்கும் வேகத்தில் உள்ளது.

