2025 ஆம் வருடத்தின் சாம்பியன் டிராபி தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கின்றன. மேலும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறது.
இந்நிலையில் குரூப் பி பிரிவில் முக்கிய போட்டியாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று மழையினால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக குரூப் பி பிரிவில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் அணிகளுக்கிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் குரூப் பி பிரிவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான பரபரப்பான போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவதில் வாய்ப்புகள் குறையும் என்பதால் 2 அணிகளும் வெற்றியை நோக்கி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன் டிராபி தொடரை வித்தியாசமான கிரிக்கெட் தொடர் என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் இந்திய அணி துபாயில் ஆடுவது சற்று வித்தியாசமானது மற்றும் இந்தியாவிற்கு சாதகமானது என குறிப்பிட்ட அவர், தான் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் தங்களது முழு கவனமும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசியிருக்கும் அவர், தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சற்று வித்தியாசமானது எனக் கூறினார்.
மேலும் போட்டியில் பங்குபெறும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடும் போது இந்தியா மட்டும் துபாயில் கிரிக்கெட் விளையாடுகிறது என தெரிவித்தார். எனினும் அதைப்பற்றி பெரிதாக யோசிப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறிய அவர் தனது கவனம் முழுவதும் ஆப்கானிஸ்தான் அணியுடன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே என தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பாக சாம்பியன் ஸ் ட்ராபி தொடரில் தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 352 ரன்கள் குவித்த போதும் இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஐசிசி போட்டிகளில் அதிக ரன்கள் சேஸ் செய்த அணி என்ற சாதனையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மார்ச் ஒன்றாம் தேதி தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டியிலும் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

