நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பயன்படுத்திய வித்தியாசமான கருவி தற்போது கவனம் பெற்றுள்ளது. நெற்றியின் வலது அல்லது இடது பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த சிறிய தங்க நிற சாதனத்துடன் அவர் பேட்டிங் செய்ததையும் பார்க்க முடிந்தது. இது என்ன கருவி, இதனால் வீரர்களுக்கு என்ன பயன் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
இந்தக் கருவியின் பெயர் ‘Temple’. சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயலால் உருவாக்கப்பட்ட இந்த உடல்நலக் கண்காணிப்பு சாதனம், வழக்கமான ஸ்மார்ட் வாட்ச்களைப் போன்று மணிக்கட்டில் அணியப்படுவதில்லை. நெற்றியின் பக்கவாட்டில், காதுக்கு மேலே உள்ள பகுதியில் சிறிய ஒட்டும் பட்டைகள் மூலம் பொருத்தப்படுகிறது.
இந்திய அணி நியூசிலாந்து சென்றடைந்த பிறகு நடைபெற்ற பயிற்சிகளின்போதும் கில் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தியிருந்தார். முதல் ஒருநாள் போட்டியிலும் அதை அணிந்திருந்த அவர், அதனுடன் பேட்டிங் செய்தார். அப்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன்கூட அந்தச் சாதனம் குறித்து கில்லிடம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Temple கருவி எப்படி செயல்படுகிறது?
பொதுவாக வீரர்கள் பயன்படுத்தும் ஃபிட்னஸ் டிராக்கர்கள் இதயத் துடிப்பு, தூக்கம், உடல் அசைவுகள் போன்றவற்றைக் கண்காணிக்கும். ஆனால் Temple அதிலிருந்து மாறுபட்டு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்காக BrainFlow என்ற தொழில்நுட்பத்தையும் ஒளி உணரிகளையும் பயன்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும்போது, ஓய்வெடுக்கும்போது அல்லது மன அழுத்தம் ஏற்படும்போது உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறது.
மேலும், Entropy என்ற மதிப்பீட்டையும் இந்தச் சாதனம் வழங்குகிறது. உடல் எந்த அளவுக்கு உழைப்புக்கு உள்ளாகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த மதிப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், கஃபைன் எடுத்துக்கொள்வது, தியானம் போன்ற காரணிகளால் இந்த அளவீட்டில் மாற்றங்கள் ஏற்படலாம்.
இதன் மூலம் வீரர்கள் பயிற்சிக்குப் பிறகு உடல் எந்த அளவுக்கு மீண்டுள்ளது, தூக்கம் எப்படி இருக்கிறது, உடல் மற்றும் மன உழைப்பு எவ்வாறு மாறுகிறது போன்றவற்றைப் புரிந்துகொள்ள கூடுதல் தகவல்களைப் பெற முடியும்.
பிவி சிந்துவும் பயன்படுத்துகிறார்!
கிரிக்கெட் வீரர் கில் மட்டுமின்றி இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்துவும் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தியுள்ளார். சர்வதேசப் போட்டிகளின்போதும் அவர் இதை அணிந்திருந்தார்.
இந்தச் சாதனம் குறித்து பேசிய சிந்து, உடலின் மீட்பு நிலை மற்றும் தூக்கம் தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்ள இது உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.
“தரவுகளைப் பார்க்கும்போது, உங்கள் உடல் எப்படி மீண்டு வருகிறது, தூக்கம் எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், உடல் மீட்பு மட்டுமின்றி அறிவாற்றல் செயல்பாடு, இதயத் துடிப்பு மற்றும் இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாடுகள் உள்ளிட்ட தகவல்களையும் இந்தச் சாதனம் வழங்குவதாக சிந்து குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், கில் இந்தச் சாதனத்தை எந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்பது குறித்து அவர் இதுவரை வெளிப்படையாக விளக்கம் அளிக்கவில்லை. இந்திய அணியின் அதிகாரப்பூர்வ உடற்தகுதி கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பயன்படுத்தப்படுகிறதா என்பதற்கும் உறுதிப்படுத்தல் இல்லை.

