ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ரோஹித் ஷர்மா. இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி 2013 சாம்பியன்ஸ் டிராபி தான். அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டைச் சதங்கள், அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என பெரிய உச்சத்தைத் தொட்டார்.
2013 ஐசிசி தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் தோனி துவக்க வீரராக முன்னேற்றி ரோஹித்தின் கேரியரை மேம்படுத்தினார். அதே சமயம் அதற்கு முந்தைய ஐசிசி உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவை அணியில் இருந்து நீக்கியதும் தோனி தான் என்று சொன்னால் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா ? அதான் அண்மையில் வெளியான ஷாக்கான தகவல்.
ரோஹித் ஷர்மா 2007 முதலே இந்திய அணியில் விளையாடி வந்தார். முதல் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அவரின் கடைசி நேர அதிரடி ஆட்டமும் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்கு. அதன் பின்னர் 2009, 2010 டி20 உலகக் கோப்பையிலும் பங்கேற்றார்.
இடையில் பல்வேறு ஒருநாள் போட்டிகளிலும் நன்றாகவே விளையாடினார். இறுதியாக 2011ஆம் ஆண்டு தன் முதல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்த்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது அணியை தேர்வு செய்த குழுவுக்கும் பெரிய ஷாக் என சமீபத்தில் தகவல் வந்துள்ளது.
இந்திய அணி தேர்வு செய்யும் குழுவின் முன்னாள் உறுப்பினரான ராஜா வெங்கட் அண்மையில் இது குறித்துப் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ 2011 உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்யும் போது ரோஹித் ஷர்மா எங்களது பட்டியலில் 15வது வீரராக இருந்தார். ஶ்ரீகாந்த் உட்பட அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். ”
“ ஆனால் கேப்டன் எம்.எஸ்.தோனி அவருக்கு பதிலாக பியூஷ் சாவ்லா வேணடுமெனக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். முதலில் ரோஹித் ஷர்மா சரியாக இருப்பார் எனக் கூறிய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டின் கூட தோனியின் விருப்பத்திற்க்குப் பிறகு மாற்றி பேசினார். நிச்சயம் அணியில் ரோஹித் இருப்பார் என நம்பி ஏமாந்ததற்குப் பின்னர் இருக்கும் செய்தி இது தான். ” என்றார் ராஜா வெங்கட்.
அணியில் இல்லாத விரக்தியில் ரோஹித் ஷர்மா, “ சூரியன் விரைவில் உதயமாகும் ! ” என டுவீட் செய்தார். அவர் சொன்னபடியே பல்வேறு சாதனைகளைப் படைத்துவிட்டார். அணி வீரராக மட்டுமில்லாமல் கேப்டனாகவும் பெற்றுள்ளார். 2021ல் கேப்டனாக பொறுப்பேற்றப் பின்னர் 50 ஓவர் உலகக் கோப்பை பைனல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என இரு முறை கடைசியில் சறுக்கி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றார்.

