இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடப் போகும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
டி20 தொடருக்கு உலகக்கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இது முன்னாள் இந்திய வீரர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோகித் சர்மா ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாதான் கேப்டனாக செயல்பட்டார். 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில், நியாயப்படி அவரது ஓய்விற்கு பிறகு ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவரைத் துணைக் கேப்டன் ஆக கூட அறிவிக்காமல் சூரியகுமார் யாதவை கேப்டனாக அறிவித்து கில்லை துணை கேப்டன் ஆக அறிவித்திருக்கிறது. இது முழுக்க கௌதம் கம்பீரின் முடிவு தான் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் புதியதாக பயிற்சியாளர் பொறுப்பில் செயல்படும் கௌதம் கம்பீர் இந்திய அணியை குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விரிவாக கூறும்பொழுது “டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாதான் துணை கேப்டன். நியாயமாக பார்த்தால் ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டனாக வந்திருக்க வேண்டும். சூரியகுமார் யாதவை எனக்கு பிடிக்கும். ஆனால் இங்கே ஒரு சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை. பாண்டியாவிடம் நேரடியாக நாங்கள் உங்களை கேப்டனாக விரும்பவில்லை என்று சொல்லி இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் அவரை எதற்காக டி20 உலக கோப்பையில் துணைக் கேப்டன் ஆக அறிவிக்க வேண்டும்? இப்போது எதற்கு கில்லை துணை கேப்டனாக அறிவிக்க வேண்டும்? கில் என் அணியில் கூட இருந்திருக்க மாட்டார். நான் ஒருவேளை தேர்வு குழு தலைவராக இருந்தால் பாண்டியாதான் என்னுடைய அடுத்த கேப்டனாக இருந்திருப்பார்.
இதையும் படிங்க:பைனல் மேட்ச் அப்போ.. விராட்டும் ஹர்திக்கும் என்கிட்ட ஒன்னு சொன்னாங்க.. அதுதான் நான் அடித்து ஆட உதவிச்சு- அக்சார் பேட்டி
இதை தெளிவாக கூறினால் தோனிக்கு பின் விராட் கோலிதான் துணை கேப்டனாக இருந்தார். விராட் கோலி கேப்டன் ஆன பிறகு ரோகித் சர்மா துணை கேப்டனாக இருந்தார். ரோகித் சர்மா கேப்டன் ஆன பிறகு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருந்தார். இப்போது நியாயப்படி ஹர்திக் பாண்டியாதான் அடுத்த கேப்டனாக வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சூரியகுமார் எனக்கு பிடிக்கும் என்பதால் அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்

