இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை ஆடுகளம் வழக்கமான பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளமாக இல்லாமல் இந்த முறை பந்துவீச்சுக்கு சாதமாக காணப்பட்டது. இதன் விளைவாக கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
சுனில் நரேன், பில் சால்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு மற்றும் ரகுவன்சி ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 57 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது. அதற்குப் பிறகு இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் கூட்டணி சரிவில் இருந்த கொல்கத்தா அணியை சற்று தூக்கி நிறுத்தியது.
இந்த ஜோடி 62 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 31 பந்துகளில் 42 ரன்கள் குவித்த மனிஷ் பாண்டே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. குறைவான ரன்கள் என்பதால் மும்பை அணி இந்த போட்டியில் நிச்சயம் வென்றுவிடும் என்று அனைவரும் கருதினார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக இசான் கிசான் 13 ரன்கள், ரோஹித் சர்மா 11 ரன்கள், நமன் திர் 11 ரன்கள், திலக் வர்மா 4 ரன்கள், ஹர்திக் பாண்டியா ஒரு ரன் என அனைவரும் குறுகிய ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேற, வழக்கம் போல சிக்கலில் மாட்டிக் கொண்டது மும்பை அணி.
அதற்குப் பிறகு சூரியகுமார் யாதவ் மட்டும் ஒரு முனையில் போராடிக் கொண்டிருந்தார். 35 பந்துகளில் 56 எண்கள் குவித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேற, ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் ஸ்டார்க் கடைசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த மும்பை அணி 18.5 ஓவரில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது மூலம் எட்டு போட்டியில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இழந்து விட்டது. ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு கொல்கத்தா அணி மும்பை மைதானத்தில் வெற்றி பெற்றது கிடையாது. கிட்டத்தட்ட 12 வருடம் கழித்து சொந்த மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருக்கிறது.

