தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியில் இடம் பெற வேண்டும் என்றும் அவர் இடம் பெறவில்லை என்றால் இந்திய அணிக்குதான் நஷ்டம், அவருக்கு நஷ்டம் இல்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து சில முக்கிய காரணங்களையும் கூறியிருக்கிறார்.
17வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் 8 போட்டியில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கம்பீரமாக உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஜெய்ஸ்வால், பட்லர் என்று பலர் இருப்பினும் ஒன் டவுனில் சஞ்சு சாம்சன் களம் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இதுவரை 385 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 82 ஆகும். அண்மையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 71 ரன்கள் குவித்து சிறப்பாக அணியை வெற்றி பெற வைத்தார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் இவரது பெர்பார்மன்ஸ் முன்னிலையில் இருப்பதால் வருகிற டி20 உலக கோப்பையில் சஞ்சு சஞ்சன் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கௌதம் கம்பீர் விரிவாக கூறும்பொழுது
“சஞ்சு சாம்சன் வருகிற டி20 உலக கோப்பையில் கட்டாயமாக விளையாட வேண்டும். அவர் விளையாடவில்லை என்றால் நஷ்டம் அவருக்கு கிடையாது இந்திய அணிக்குத்தான். இந்திய அணியில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பிசிசிஐ ஆதரவு வழங்குவது போல் சஞ்சு சாம்சனுக்கும் வழங்க வேண்டும்.
சஞ்சு சாம்சனுக்கு சரியான ஆதரவை வழங்கியிருந்தால் அவர் இந்நேரம் இந்தியாவின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவாகி இருப்பார். நான் தேர்வு குழு உறுப்பினராக இருந்திருந்தால் சஞ்சு சாம்சனை டி20 உலக கோப்பையில் நான்காவது இடத்தில் விளையாட வைத்திருப்பேன். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
கௌதம் கம்பீர் தெரிவித்தது போல இந்தியாவின் பல முன்னணி வீரர்களும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டி20 உலக கோப்பை காண இந்திய அணி இன்னும் சில தினங்களில் வெளிவரும் நிலையில் அதில் இடம்பெறும் வீரர்களை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

