நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
டெல்லி அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அணி வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணத்தையும் கூறி இருக்கிறார்.
இப்போட்டியில் டாஸ் இழந்த கொல்கத்தா அணி முதலில் பந்து வீசியது. கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்து விக்கெட் சரிய ஆரம்பித்தது. முன்னனி பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக ஆட்டம் இழக்க, சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மட்டும் ஓரளவு கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என 36 ரன்கள் குவித்தார்.
இவரின் ஆட்டத்தால் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அற்புதமாக விளையாடி 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.
இந்த போட்டியில் டெல்லி அணியில் ரிஷப் பண்,ட் ஸ்டெப்ஸ், குஷாக்ரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் வெற்றிக்கு பின்னர் அவர் கூறும் பொழுது
“இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் பந்து நின்று வந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து சுழலவும் ஆரம்பித்தது. நான் வீசிய பந்தில் ரிஷப் பண்டுக்கு விடப்பட்ட கேட்ச் சிறந்த பந்து என்று நினைத்தேன்.
ஆனால் பண்ட் ஆட்டம் இழந்த பந்து இதுவே வேறு ஒரு மைதானமாக இருந்திருந்தால் நிச்சயமாக சிக்ஸருக்கு சென்றிருக்கும். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை விளிம்பு நிலை விளையாட்டாக மாறிவிட்டது. இந்த மூன்று விக்கெட்டுகளில் ஸ்டெப்ஸ் விக்கெட்தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. நான் ஒரு லெக் ஸ்பின்னர் ஆக பந்து வீச முயற்சி செய்தேன். அது இன்று நன்றாக வேலை செய்து இருக்கிறது.
பொதுவாக பந்துவீச்சில் எனக்கு சரியாக அமையவில்லை என்றால் சுனில் நரேன் எப்போதும் என்னுடன் கூட இருப்பார். அவர் அதிகம் பேச மாட்டார். ஆனால் எங்களுக்குள் ஒரு நட்பு எப்போதும் இருக்கும். நான் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்த போது, ஷாருக்கான் மற்றும் அபிஷேக் நாயர் பேசிய விதம் எனக்கு உதவியாக இருந்தது. மேலும் சியர்ஸ் கேர்ள்ஸ் சிக்ஸருக்கு மட்டும் நடனம் ஆடலாம். பௌண்டரிகளுக்கு ஆட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

