இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகானே ஒன்பது ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு அணியின் கேப்டன் ருத்ராஜ் மற்றும் டாரி மிச்சல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இருவர் கூட்டணி ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நிதானமாகவும், அதே நேரத்தில் சுலபமான பந்துகளை அடித்து ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 67 பந்துகளில் 104 ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 126 ரன்கள் இருந்த போது இரண்டாவது விக்கெட்டை பறி கொடுத்தது. டாரி மிச்சல் 52 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த சிவம் துபே அதிரடியாக விளையாடி சென்னை அணியின் ரன்களை உயர்த்தினார். 20 பந்துகளை எதிர்கொண்ட தூபே நான்கு சிக்ஸர்களுடன் 39 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், மூன்று சிக்சர்களுடன் 98 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக சதம் விளாசும் வாய்ப்பை பறி கொடுத்தார்.
இறுதியாக சென்னை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பவர் பிளேவிலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நான்கு ஓவர்களில் 40 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை பறி கொடுத்தது. டிராவிஸ் 13 ரன்களிலும் அபிஷேக் சர்மா 15 ரன்களிலும் இம்பாக்ட் பிளேயராக களம் இறங்கிய அன்மோல்பிரீத்சிங் ஜீரோ ரன்னில் வெளியேறினார்கள்.
இந்த மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளரான துஷார் தேஷ் பாண்டே மிகச் சிறப்பாக பந்துவீசி வெளியேற்றினார். அதற்குப் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை தொடர்ந்து பறிகொடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ளாசன் 21 பந்துகளில் 20 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
இதையும் படிங்க:நம்பி ஓவர் கொடுத்த ருத்ராஜ்.. சொல்லி அடித்த கில்லி.. தொடக்க ஜோடிக்கு செக் வைத்த துஷார் தேஷ் பாண்டே
இறுதியாக சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஏற்கனவே மூன்றாவது இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி நான்காவது இடத்தில் கீழே இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

