ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது இரண்டாவது போட்டியை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி இருக்கிறது. ஆட்டநாயகன் விருது பெற்ற சிவம் தூபே சிஎஸ்கேவில் தன்னுடைய நிலைமை குறித்துக் கூறி இருக்கிறார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்த குஜராத் அணி முந்தைய போட்டியில் மும்பை அணிக்கு எதிராக இவர்களின் பந்துவீச்சு திட்டம் வேலை செய்தது போல் சென்னை சூப்பர் கிங்ஸிடம் வேலை செய்யவில்லை. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் முதல் இறுதி ஆட்டக்காரர் வரை குஜராத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ரா நியூசிலாந்து நாட்டில் குடி பெயர்ந்தாலும், அவரின் ஒவ்வொரு அதிரடி ஆட்டமும் ஒரு இந்திய அணி வீரரை அப்படியே நினைவுக்கு கொண்டு வருகிறது. வெறும் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். பின்னர் ஆட்டத்தின் பாதியில் நுழைந்த சிவம் துபே தனது வேலையை மிகக் கச்சிதமாக செய்து முடித்தார். வெறும் 23 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஐந்து சிக்சர்களை அடித்து நொறுக்கி 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி சென்னை அணி வீரர்களின் அற்புதமான பந்துவீச்சினால் விரைவிலேயே விக்கெட்டுகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. குஜராத் அணியில் சாய் சுதர்சன் மட்டுமே அதிகபட்சமாக 37 ரன்கள் குவித்தார். இறுதியில் குஜராத் அணி 148 ரன்கள் மட்டுமே குவித்தது. அந்த அணியின் கேப்டன் கில் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் கேப்டன் மில்லர் 21 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த சிவம் துபே ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில்
“சென்னை அணி நிர்வாகம் மற்ற அணி நிர்வாகத்தை விட முற்றிலும் வித்தியாசமானது. எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குகிறது.
எனக்கு அணி நிர்வாகம் மிக உறுதுணையாக இருக்கிறது. எனது சென்னை அணிக்காக மேலும் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன். நான் அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக எனக்கு ஷார்ட் பிட்ச் பந்து வீச்சில் குறை இருந்தது. எனவே குஜராத் அணி எனக்கு எதிராக அதை செயல்படுத்த போகிறார்கள் என்று முன்னரே அறிந்தேன். ஆனால் அனைத்திற்கும் நான் தயாராகவே களத்தில் நின்று இருந்தேன். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. குஜராத் அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், சென்னை அணி டெல்லி கேப்பிடல் அணியும் வருகிற ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ள இருக்கிறது.

