பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆறாவது ஐபிஎல் டி20 லீக் போட்டியில் விராட் கோலி அற்புதமாக விளையாடி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக சிராஜ் இரண்டு விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினார்.
பின்னர் 177 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பங்காற்றவில்லை. இருப்பினும் நிதானமாக விளையாடிய விராட் கோலி 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு அருகாமையில் வர அதனை தினேஷ் கார்த்திக் இறுதி கட்டத்தில் அற்புதமாக விளையாடி முடித்து வைத்தார். இதனால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி தோல்வியை தழுவினாலும் அந்த அணியின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார். முக்கியமாக ஹர்பீத் பிரார் 4 ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ரபடா நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெடுகளை அள்ளினார்.
இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து கூறிய அவர்
“ரசிகர்களுடனான அன்பு, காதல் பல வருடங்களாக நீடித்து வருகிறது. மக்கள் விளையாட்டில் சாதனைகள், எண்கள் பற்றி பேசுகிறார்கள். இவை எல்லாமே கடந்து விட்டு பார்த்தால் வெறும் நினைவுகளாக மட்டுமே இருக்கும். நான் எனது அணிக்கு நல்ல தொடக்கத்தினை கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால் விக்கெட்டுகள் விழும் பொழுது ஆட்டத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாம் பாதியில் ஆடுகளமும் பேட்டிங்க்கு சாதகமாக இல்லாமல், இரண்டு விதமான கண்ணோட்டங்களில் இருந்தது. எனவே நான் சரியான கிரிக்கெட் சாட்களை விளையாட முயற்சித்தேன். கிரீசை விட்டு வெளியே வந்து ஆடுவது வேலை செய்யவில்லை. நான் கவர் ட்ரைவ் நன்றாக விளையாடுவேன் என்று அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை. என்னை பாயிண்ட் திசையில் விளையாட வைக்க முயற்சித்தார்கள். எதற்கும் இடம் கொடுக்காமல் இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றேன். போட்டியை முடிக்கும் நேரத்தில் தவறுதலாக ஒரு ஷார்ட் விளையாடி ஆட்டம் இழந்தது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் வந்தாலும் எங்கு நிறுத்தினாரோ அங்கேயே ஆரம்பித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவருக்கா இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இடம் இல்லை என்று சொன்னது என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

