17 வது சீசன் ஐபிஎல் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்த குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி பேட்டிங் செய்த குஜராத் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 45 ரன்கள் குவித்தார். கேப்டன் கில் 31 ரன்களும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராகுல் திவேட்டியா 22 ரன்களும் குவித்தனர். இதனால் 20 ஓவர்களில் குஜராத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.
அதன் பிறகு பேட்டிங் தொடங்கிய மும்பை அணி அதன் பேட்டிங் பலத்தை பார்க்கும் போது எளிதாக வென்று விடும் என்று அனைவரும் எண்ணினர். மும்பை அணியின் இசான் கிசான் ஜீரோ எண்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் முன்னால் கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி 43 ரன்கள் குவிக்க, பின்னர் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய பிரவிஸ் 46 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் 45 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்த மும்பை அணிக்கு குஜராத் அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய பின்னர் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஒட்டுமொத்த அணி வீரர்களின் முயற்சியினால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத் அணி இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாடியது. எனவே தோல்வி குறித்து பேசி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா
“கடைசி ஐந்து ஓவர்களில் 48 ரன்கள்தான் தேவைப்பட்டது. இந்த இலக்கை நாங்கள் நிச்சயம் அடைந்து விடுவோம் என்று தான் எதிர்பார்த்தோம்.
ஆனால் துரதிஷ்டவசமாக எங்களால் வெற்றி பெற முடியவில்லை. முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்கள் தோல்வியின் முக்கிய காரணமாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் இது போன்ற பெரிய மைதானத்தில் விளையாடும் போது ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து விளையாட வேண்டும். மேலும் ரசிகர்களும் இந்த ஆட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். திலக் வர்மாவும் டிம் டேவிட் பேட்டிங் செய்யும்போது திலக் வருமா ஒரு ரன் ஓட மறுத்து விட்டார்.
இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையா என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக கிடையாது. அந்த சமயத்தில் திலக் வர்மா வேறு ஏதாவது ஐடியா வைத்திருக்கலாம். எனவே அவரது முடிவுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது இன்னும் 13 போட்டிகள் உள்ளது. அதில் நிச்சயமாக மீண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.
குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா தாவியதால் குஜராத் அணிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் இந்த போட்டி முக்கியமாக அமைந்தது. களத்தில் குஜராத் அணி வீரர்களின் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

