17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். சுனில் நரேன் இரண்டு ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் மிக அருமையாக விளையாடி 50 ரன்கள் குவித்தார்.
அதன் பிறகு களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ராணா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். காயத்திற்கு பிறகு மீண்டு வந்திருக்கும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு களம் இறங்கிய இளம் வீரர் ரமன்தீப் சிங் 17 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.
பின்னர் இறுதி கட்டத்தில் களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் ஏழு சிக்ஸ்களை விளாசி 64 ரன்கள் குவித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெடுகளை கைப்பற்றினார். பின்னர் 209 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டாக அனுபவ வீரர் மயங்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ரன்கள் குவித்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கிளாசன் இந்தப் போட்டியில் தனது அதிரடியான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.
இவர் களத்தில் இருக்கும் வரை ஹைதராபாத் அணிக்கு வெற்றி நம்பிக்கை இருந்தது. இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட, இருபதாவது மூவரை ஹர்ஷித் ரானா வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விளாசிய கிளாஸன் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் சபாஷ் அகமது ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் நான்காவது பந்தில் மேர்கோ ஜான்சன் ஒரு ரன் எடுக்க, ஐந்தாவது பந்தில் கிளாசன் எதிர்பாராத விதமாக சுயாஸ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் சன் ரைசர்ஸ் அணி 204 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த போட்டியில் மொத்தம் 412 ரன்கள் குவித்து இரு அணிகளும் ரன் மழை பொழிந்தன.
இதனால் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. 25 கோடிக்கு வாங்கப்பட்ட கொல்கத்தா அணியின் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிவரை வெற்றிக்காக போராடிய ஹைதராபாத் அணிக்கு இது சற்று ஏமாற்றமாக அமைந்தது. எனவே அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணி வலுவாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

