17வது ஐபிஎல் சீசன் திருவிழா தற்பொழுது வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
மகேந்திர சிங் தோனி கேப்டன்சியை விட்டு விலகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்ராடஜ் கெய்க்வாட் தலைமை தாங்கினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டூப்ஸ்சிஸ் தலைமையில் களமிறங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசியது.
அதன்படி பேட்டிங் தொடங்கிய பெங்களூர் அணி கேப்டன் டூபிளஸ்சிஸ்ன் அதிரடியால் பவர் பிளே வரை ஓவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் வந்தது. ஐந்தாவது ஓவரில் 41 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது பெங்களூர் அணி. 35 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளஸ்சிஸ் முஸ்தபிகுரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பிறகு வந்த ராஜத் பட்டித்தார் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் களம் இறங்கிய கேமரூன் கிரீன் 18 ரன்களிலும், விராட் கோலி 21 ரன்களிலும் ஆட்டம் இழக்க, 74 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் பெங்களூர் அணி தத்தளித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணி பெங்களூர் அணியை சவாலான ஸ்கோரை எட்ட உதவியது. இருவரின் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. 25 பந்துகளில் அனுஜ் ராவத் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்களும் குவித்தனர். சென்னை அணித்தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஸ்தபிகுர் ரகுமான் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார்.
இதை அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி அணியின் கேப்டன் ருத்ராஜ் பதினைந்து ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவிந்த்ரா மிகச் சிறப்பாக விளையாடி 15 பந்துகளில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 37 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அஜிங்கிய ரகானே 27 ரன்களும், டேரி மிட்சல் 22 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் 110 ரண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த சென்னை அணிக்கு சிவம் தூபேவும், ஜடேஜாவும் சென்னை அணி வெற்றி பெற உதவினர். சிவம் துபே 34 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 25 ரன்களும் குவித்தனர்.
பெங்களூர் அணி தரப்பில் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியையும், பெங்களூர் அணி தனது முதல் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 16 வருடங்களாக பெங்களூர் அணி சென்னையில் வெற்றியைப் பதிவு செய்ததில்லை. இந்த வருடமும் அந்த சோகம் நீடிக்கிறது. 16 வருடங்களாக பெங்களூருவிடம் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவாத அணி என்ற பெருமையும் சென்னை அணி பெற்றுள்ளது.

