ஐபிஎல் 24க்காண கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஆட்டக் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஐபிஎல்லில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு அணி, அதன் நிர்வாகம் தற்போது அறிவித்துள்ள செய்தியினால் ரசிகர்கள் கொந்தளிப்படைந்து வருகின்றனர்
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்லாத போதும், அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிற அணிகளில் ஒன்றாக உள்ளது பெங்களூர் அணி. பெங்களூர் அணி மோதும் ஒவ்வொரு போட்டியிலும் மைதானம் நிரம்பி வழிவது மட்டுமில்லாமல், தொலைக்காட்சி வாயிலாகவும் அதிகளவு ரசிகர்கள் போட்டியினைக் கண்டுகளித்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
எந்த ஒரு பலனையுமே எதிர்பார்க்காமல் பாசத்தைக் கொட்டுகிற ரசிகனை வைத்தே பெங்களூர் அணி நிர்வாகம் பணம் சம்பாதிக்க முடிவு செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது பெங்களூர் அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களிடையே கோபத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது மார்ச் 22ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் போட்டி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆர்சிபி அணி நிர்வாகம் ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தது. அது ஆர்சிபி அணியின் பெயர் மாற்றும் நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று யூகங்கள் கூறுகின்றன.
இந்த நிகழ்ச்சியை பெங்களூர் அணியின் இணையதளம் மற்றும் செயலியில் காணலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க கட்டணமாக 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது இரண்டு மாதங்கள் நடைபெறுகிற ஐபிஎல் தொடரையே இலவசமாக கண்டுகளிக்கும் வேளையில், வெறும் ஒரு மணி நேரத்திற்காக 99 ரூபாய் வசூலிப்பதா? என்று ரசிகர்கள் கோபமடைந்து வருகின்றனர்.
ஆர்சிபி அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கும் வேலையில், இந்த நிகழ்ச்சியைக் காண 20 லட்சம் ரசிகர்கள் கட்டணத் தொகையாக 99 ரூபாய் செலுத்தினால் கூட ஆர்சிபி நிர்வாகத்திற்கு கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் கிடைக்கும். ஏற்கனவே போட்டியைக் காண மைதானத்திற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து ரசிகர்கள் வருகிறார்கள்.
எந்த ஒரு பலனையுமே எதிர்பார்க்காமல், தனது நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து, விராட் கோலிக்காகவும் தனது மாநில அணி வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் போட்டியைக் காண வரும் ரசிகனை வைத்தே இப்படி பணம் சம்பாதிப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

