மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பெங்களூர் அணி கோப்பையை வென்றவுடன் அணியின் கேப்டன் மந்தனா ஆண் நபர் ஒருவருடன் ஜோடியாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 61 ரன்கள் வரை விக்கெட்டுகளை இழக்காத டெல்லி அணி, அடுத்த 52 ரன்களில் 10 விக்கெட்டுகளும் இழந்துள்ளது.
அடுத்த பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிதானமாக விளையாடி 19 வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஐபிஎல் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியும் ஆண்கள் கிரிக்கெட் அணியால் இன்னும் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் லீக் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், பெங்களூர் அணி கடந்த சீசனில் மோசமான பங்களிப்பை அளித்தது.
இருப்பினும் தற்போது நடைபெற்ற தொடரில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று தற்போது கோப்பையையும் வென்று வரலாறு படைத்துள்ளது. வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பெங்களூர் அணியின் முன்னாள் நிறுவனர் விஜய் மல்லையா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
16 ஆண்டுகள் ஆகியும் கோப்பையை வெல்ல முடியாததால் ஆர்சிபி அணி ரசிகர்கள் மற்ற அணி ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு சமூக வலைதளங்களில் ஆளாகினர். தற்போது அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்சிபி அணி ரசிகர்கள் மீம்ஸ்களை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆண் நபர் ஒருவருடன் ஜோடியாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இவர் யார் என்று பார்க்கையில் ஸ்மிருதி மந்தனாவின் காதலர் பலாஷ் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்.
இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற போது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தற்போதுஇந்த முறையும் அதேபோல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. பாலிவுட் நட்சத்திர இசையமைப்பாளரான பலாஸ் ஒரு நிகழ்வில் மந்தனாவை சந்தித்த பிறகு அது காதலாக மாறியது என்று கூறுகின்றனர்.

