2023- 2024ம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் பி பிரிவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் கேரளா மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதின. உத்தரப்பிரதேச அணிக்கு ஜூயல் கேப்டன் ஆகவும் கேரளா அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டன் ஆகவும் பதவி வகித்தனர். டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சமரத் சிங் 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஜுயல் சற்று நிதானமாக விளையாடி 28 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரியம் கார்க் பொறுமையாக விளையாடி 44 ரன்கள் குவித்து பாசில் தம்பி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் இறங்கிய அக்ச்தீப் நாத் 9 ரன்களில் வெளியேற, சமீபத்தில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரர் சமீர் ரிஸ்வி களம் இறங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கிய சமீர் ரிஸ்வி டெஸ்டில் டி20 கிரிக்கெட்டுக்கான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 18 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஸ்ரேயாஸ் கோபால் பந்து வீச்சில் கேரளா அணியின் கேப்டன் சஞ்சு சாமிசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இவரின் அதிரடி ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சிறிது நேரமே களத்தில் நின்றாலும் அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி சென்ற சமீர் ரிஸ்வி, ஐபிஎல் இல் சென்னை அணியில் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளார். இவரது பேட்டிங்கைக் காண இப்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டுள்ளது.
சமீர் ரிஸ்விக்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர ஆட்டக்காரர் ரிங்கு சிங், அதிரடியாக விளையாடி 138 பந்துகளில் எட்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்து அணிக்குத் தேவையான ஸ்கோரை குவித்துச் சென்றார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜுரேல் 63 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற உத்தர பிரதேச அணி 302 ரன்களுக்ககு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கேரள அணித் தரப்பில் பாசில் தம்பி இரண்டு விக்கெட்டுகளையும், நிதிஷ் மூன்று விக்கட்டுகளையும் சக்சேனா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது தனது முதல் இன்னிசைத் தொடங்கியுள்ள கேரளா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 19 ரன்கள் குவித்துள்ளது.

