இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஏமாற்றமாக ஜெய்ஸ்வால் டக்அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கில் சிறிது நேரம் நிலைத்து நின்றார். 72 ரன்களில் இந்திய அணி தனது இரண்டாவது விக்கட்டையும் பறிகொடுத்தது. ரோகித் சர்மா 39 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதை அடுத்து கில்லும் 36 ரன்களில் வெளியேறினார். பிறகு விராட் கோலி, கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து 46 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். இதுவரை மட்டுமே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. கேஎல் ராகுலை தவிர பின்னால் வந்த ஆறு வீரர்களும் டக்அவுட்டாகி வெளியேறினர். இவர்களைத் தவிர கே.எல் ராகுல் மட்டுமே 33 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தார்.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருந்த சிறப்பான வாய்ப்பை இந்திய அணியே தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல்தான் இருந்தது. 153 ரன்களுக்கு 4 விக்கெட் என்று இருந்த நிலையில் ஆறு வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்ததால் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்துள்ளது.
ஆறு விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் இந்திய அணி ஒரு மோசமான சாதனையை பாகிஸ்தான் அணியுடன் சமன் செய்து இருக்கிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து ஆறு பேர் டக்அவுட் ஆகி வெளியேறினர். தற்போது இந்திய அணியிலும் தொடர்ந்து ஆறு பேர் டக்அவுட் ஆகி வெளியேறி அச்சாதனையை சமன் செய்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு விக்கெட் கூடுதலாக இந்திய அணி இழந்து இருந்தால் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதல் இடத்தில் இருந்திருக்கும்.
ஆனால் இது இரண்டாவது முறை அல்ல இதற்கு முன்னரே தென்னாபிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆறு பேர் டக்அவுட் ஆகி இருக்கிறார்கள். பின்னர் பங்களாதேஷ் அணியும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் ஆறு பேர் டக்அவுட் ஆகி இருக்கிறார்கள். பின்னர் இந்திய அணியுமே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தொடர்ந்து ஆறு பேர் டக்அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்கள். அப்போட்டியில் இந்திய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
தற்போது இரண்டாவது இன்னிசை தொடங்கியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 4 நாள் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

