நேற்று இரவு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த சிஎஸ்கே தற்போது 3 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே சஞ்சு சாம்சனின் அபாரமான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு 101 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் இந்த போட்டி முடிந்து அவர் பேசும் போது ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து தான் விளையாடியது தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு மிக முக்கிய காரணம் என்று அவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்த மைதானத்தில் நான் சதம் அடித்திருப்பது எனக்கும் எனது அணிக்கும் சிறப்பான விஷயமாகும். நான் இப்போது எனது திட்டங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன். போட்டிக்கு முன்பே நான் எதையும் திட்டமிடாமல் விளையாடும் போது ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நான் மாறுவது முக்கியமான விஷயமாகும். மேலும் எங்களுக்கு சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழும்போது ஒருவர் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று உணர்ந்து நான் பொறுப்பை கையில் எடுத்தேன். மேலும் எங்கள் வீரர்கள் மிகவும் இளம் வீரர்கள் என்பதால் அவர்களுக்கு போதிய நேரம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். சிஎஸ்கே ஜெர்சியை அணிந்து விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு மஞ்சள் நிற ஜெர்சியை நான் இவ்வளவு பார்த்ததில்லை” என்று மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

