இன்று டி20 உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் சிவம் துபே, சிறப்பு சாதனை படைத்திருக்கிறார். அவரது அதிரடியின் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் 28 பந்துகளில் 34 ரன்கள், திலக் வர்மா 27 பந்தில் 31 ரன்கள், ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய சிவம் துபே 31 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.
மேலும் இந்த போட்டியில் சிவம் துபே 66 ரன்கள் எடுத்ததின் மூலம் டி20 உலக கோப்பையில் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது மற்றும் அதற்கு கீழே வந்து அதிக ரன் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்பு முதல் இடத்தில் ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 63 ரன்கள், இரண்டாவது இடத்தில் யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு 53 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.

