தற்போது நடைபெற்று முடிந்த ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீலங்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. பல்லிகேலேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்களான மிச்சல் மார்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேறி நிலையில் அதற்குப் பிறகு இந்த வாய்ப்பை ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாததால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஹேமன்தா 3 விகட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் பதும் நிஷாங்காவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 184 ரன்கள் குவித்து அதிரடியான வெற்றியை பெற்றது. நிஷாங்கா 52 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஸ் 51 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் இரண்டாவது தோல்வியை தழுவி இருக்கும் ஆஸ்திரேலியா அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் மங்கிப் போய் இருக்கிறது என்று கூறலாம்.

