இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக விளங்குபவர் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதிலும் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டி என்றால் அவரின் பங்களிப்பு குறித்து சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தனது சுழலில் எதிரணி பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தி விடுவார்.
ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடரை பொருத்தவரை இவரின் பங்களிப்பு பெரிதாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. கடந்த டி20 உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆப் ஸ்பின்னர் என்ற வகையில் அணியில் சேர்க்கப்பட்டார். அவரின் பந்து வீச்சு நல்ல பலனை கொடுத்தது. ஆனால் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அவரால் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
டெஸ்டில் நிரந்தர இடத்தைப் பிடித்து விளையாடி வரும் அஸ்வினின் வயது தற்போது 37 ஆகியுள்ள நிலையில் 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 490 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்னும் நான்கைந்து வருடங்கள் விளையாடும் நிலையில் பல சாதனைகளை இவர் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல 116 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் இவர் இதே போல சிறப்பான பங்களிப்பை அளித்தால் 800 விக்கெட்டுகள் என்ற முத்தையா முரளிதரன் சாதனையை இவர் நெருங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், அஸ்வின் டெஸ்ட் அணிக்கு மட்டுமே பொருத்தமானவர் என்றும் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் அவருக்கு சரிவராது என்றும் சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது
“அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஆனால் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் அவர் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அவர் டெஸ்ட் அணியில் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறும் யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பையில் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பௌலிங் என அனைத்துத் துறைகளிலும் ஆல்ரவுண்டராக ஜொலித்து உலகக்கோப்பைத் தொடர் நாயகன் என்ற விருதைப் பெற்றுள்ளார். மேலும் அவர் மிகச்சிறந்த ஃபீல்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கின் தற்போதைய இந்த கருத்துக்கு அஸ்வின் ரசிகர்கள் பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

