2024 டி20 உலக கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக அனைத்து நாடுகளும் உலகக் கோப்பைக்கு தயாராகிவரும் நிலையில், இந்திய அணி விராட் கோலியின் பெயரை நீக்குவது குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் முடிந்து சில நாட்களில் டி20 உலக கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இதற்கான மைதானங்களைத் தற்போது இரு நாடுகளும் மிகத் தீவிரமாக தயார் படுத்தி வருகின்றன.
உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னணியில் உள்ளன. 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணியை பிசிசிஐ உருவாக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக ரிங்கு சிங், திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் இந்திய டி20 அணியில் இடம் பெற்று விளையாடினர். ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் டி20 தொடரில் இடம் பெற மாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியது.
சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியதால், சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அத்தொடரில் விராட் கோலியின் இடம்பெற்று சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினார். இந்நிலையில் வரும் உலக கோப்பை டி20 தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
எனவே ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவது உறுதியாகியுள்ள நிலையில், விராட் கோலியை நீக்குவதற்கு தேர்வுக் குழுவினர் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியது. இந்திய அணியை பொறுத்தவரை ஒரு முனையில் நிலைத்து நின்று தரமாக இன்னிங்ஸஸைக் கட்டமைத்து விளையாடும் கோலி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற மெதுவான ஆடுகளங்களில் இவரது ஆட்டம் பொருந்தாது என பிசிசிஐ நம்புவதாக டைம்ஸ் நவ் இணையத்தில் செய்திகள் வெளியாகியது.
ஆனால் கடந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 765 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்த இறுதி முடிவை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு ஐபிஎல்லில் விராட் கோலியின் செயல்பாட்டினைப் பார்த்துவிட்டு இறுதி முடிவினை எடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியது. விராட் கோலியை போல் வேறு யாரால் நிலைத்து நின்று அணியின் இன்னிங்சை கட்டமைக்க முடியும். அவர் இல்லாமல் போனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு, 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலியை நீக்குவதா? என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

