கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடுவதால் சிவம் துபேவுக்கு தற்போது இந்திய அணியில் ஒரு நம்பிக்கையான இடம் கிடைத்திருக்கிறது. தூபே சென்னை அணியில் இணைந்த பிறகு இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து சிவம் துபே சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டு சிவம் துபே இந்திய அணியில் அறிமுகம் ஆகிவிட்டாலும், நிலையற்ற செயல்பாடுகளின் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படவில்லை.மேலும் அந்த சூழலில் ஐபிஎல் தொடரிலும் சற்று மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வந்தார்.
இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்காததாலும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாட போதிலும், அவரது சீரற்ற செயல்பாடுகளின் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே முடிவுக்கு வருவது போல இருந்தது.
இந்த சூழ்நிலையில்தான் 2022 ஆம் ஆண்டு சிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. சிஎஸ்கே மற்றும் தோனி சிவம் துபேவை சிறப்பாக கையாண்டதில் பெரிய இன்னிங்ஸ்களை சென்னை அணிக்காக வழங்கினார். மேலும் மிடில் ஆர்டரில் களம் இறங்கி சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்குவதால் அவருக்கு சமீபத்தில் இந்திய டி20 உலகக் கோப்பை அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஓரளவு நன்றாக செயல்பட்டதால், அடுத்தடுத்த தொடர்களில் சிவம் துபேவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து துபே கூறும் பொழுது “நான் எப்போதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பேன். அதிலும் தோனியுடன் இணைந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் நான் இந்திய அணியில் வரும் பொழுது தோனி ஓய்வு பெற்று விட்டார்.
இதையும் படிங்க:ருத்ராஜை ஏன் எடுக்கல.. அதற்கு விளக்கம் வேணும்னா டி20 உலக கோப்பையை பாருங்க – அஜித் அகர்கர் பேட்டி
அந்த சமயம் நான் மோசமாக உணர்ந்தேன். பின்னர் ஐபிஎல் தொடரில் நான் அறிமுகமாகும் போதும் கூட சிஎஸ்கே அணியில் இல்லை. அதற்கு பின்பு தான் சென்னை அணிக்காக விளையாட ஆரம்பித்தேன். அது மகேந்திர சிங் தோனியுடன் உரையாட எனக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. ஆரம்பத்தில் நான் பேசும் பொழுது எனக்கு பதட்டமாக இருக்கும். தோனி ஒரு வீரர் பற்றி பேசும்போது அவருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சென்னை அணியில் எனக்கு பல இடங்களில் தோனி உதவி இருக்கிறார். அவரோடு நான் நெருங்கி பழகினாலும் இன்னமும் நான் அவரின் ரசிகனாகவே உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

