நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து பந்துகள் மீதும் வைத்து வெற்றி இலக்கை அடைந்தது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய்பூர் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டூ பிளஸ்சிஸ் மற்றும் விராட் கோலி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டூப்ளசிஸ் 33 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 44 ரன்கள் விளாசினார்.
பின்னர் வந்த மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு வந்த சௌரவ் சவுகான் 9 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மறுமுனையில் விராட் கோலி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சிறப்பாக விளையாடிய கோலி 67 பந்துகளில் சதம் விளாசி 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 12 பௌண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
20 ஓவர்களில் பெங்களூர் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 183ரன்கள் குவித்தது. 184 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதும் இன்றி வெளியேறினார். அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடிய சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். மறுமுனையில் தொடர்ந்து விளையாடிய பட்லர் 59 பந்துகளில் சதத்தை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.
பெங்களூர் அணி பேட்டிங் முடித்துவிட்டு சதம் விளாசிய விராட் கோலி பேசிய பொழுது
“இந்த ஆடுகளத்தை வெளியே இருந்து பார்க்கும்போது பேட்டிங் செய்ய சாதகமாக தட்டையான ஆடுகளமாக தெரிகிறது. ஆனால் விளையாடும் பொழுதுதான் இந்த ஆடுகளத்தில் பந்து நின்று வருவதும் வேகத்தில் மாறுபாடு இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அணியின் கேப்டன் அல்லது நான் எங்கள் இருவரில் யாராவது ஒருவர் நிலையாக நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.
183 ரன்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். வேகப்பந்துவீச்சாளர்கள் என் விக்கெட் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று யூகம் அமைப்பார்கள். அவர்களை எதிர்கொள்ள திட்டம் வைத்திருந்தேன். மற்றபடி எந்த முன்முடிவும் செய்து விளையாட வரவில்லை. நமக்கு இருக்கும் அனுபவத்தை கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும். பனிப்பொழிவு இருந்த போதிலும் ஆடுகளம் வறட்சியாக காணப்பட்டது.
இதையும் படிங்க:94 ரன்.. கடைசி ஓவர் முதல் பந்து.. பட்லர் வைத்த ட்விஸ்ட்.. கோலியின் சதம் வீண்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு எதிராக என்னால் அதிரடியாக விளையாட முடியவில்லை. சுழற் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வாக் செய்ய இயலவில்லை. பந்தை தரையில் வைத்து ஆடும் வகையிலேயே இருந்தது” என்று கூறி இருக்கிறார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி நான்கிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பெங்களூர் அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

