ஐபிஎல் திருவிழாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. கடந்த சில போட்டிகளாக சரியான துவக்கம் கிடைக்காமல் தடுமாறிய பெங்களூர் அணிக்கு இந்த முறை அற்புதமான துவக்கம் கிடைத்தது. அதற்கு முன்னர் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் நீக்கப்பட்டு குஜராத்தை சேர்ந்த சவுரவ் சவுகானுக்கு போட்டியில் அறிமுக வாய்ப்பு கிடைத்தது.
விராட் கோலி பாப் டூ பிளஸ்சிஸ் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் குவித்தது. கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் 32 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 44 ரன்கள் குவித்து சுழற் பந்துவீச்சாளர் சாகல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் மூன்றாவது பந்திலேயே கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதற்கு அடுத்து வந்த அறிமுக வீரர் சௌரவ் சவுகான் ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் குவித்து சகால் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மறுமுனை அபாரமாக விளையாடிய விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 113 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.
அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் சாம்சன் ஜோடி இருவரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதைத்தனர்.
சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் எட்டு பவுன்டரி, இரண்டு சிக்சர்கள் என 69 ரன்கள் குவித்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் வெளியேறினாலும், மறுமுனையில் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் இந்த முறை நான்கு ரன்கள் வெளியேறினாலும், ஜாஸ் பட்லர் மறுமுனையில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
இதையும் படிங்க:இந்த ஒன்னு போதுமே கேப்டன்சி எப்படின்னு சொல்ல.. ஜடேஜாவை தடுத்து நிறுத்தி.. ருத்ராஜ் செஞ்ச அசத்தல் மூவ்
பட்லர் இறுதியாக 94 ரன்கள் இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு ஆறு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட, பெங்களூர் அணியின் கேமரன் கிரீன் வீசிய முதல் பந்தை அபாரமாக சிக்ஸருக்கு விளாசி சதம் அடித்தார். கடந்த மூன்று போட்டிகளாக பார்ம் இன்று தவித்த வந்த பட்லர் இந்த போட்டியில் அபார சதம் விளாசியின் மூலம் தனது இழந்த பார்மை மீட்டெடுத்தார். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி நான்காவது தோல்வியை தழுவி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

