இந்தியாவில் ஐபிஎல் சீசன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி சென்னை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்று சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை அணி பங்குபெறும் இரண்டாவது போட்டி இதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முறை சென்னை அணி பேட்டிங் செய்தது காரணம் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. டாஸில் பந்துவீச்சு தேர்வு செய்தது தவறு என கில் பின்னர் உணர்ந்து இருப்பார். ஏனெனில் இந்தப் போட்டியில் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர்.
அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்கள், கெய்க்குவாட் 36 பந்தில் 46 ரன்கள், சிவம் தூபே 23 பந்தில் 51 ரன்கள், இளம் வீரர் சமீர் ரிஸ்வி ஆறு பந்தில் 14 ரன்கள் என ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அதிரடியாக விளையாடினர். பல மாதங்களுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் இப்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே குவித்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி களம் இறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் களமிறங்கவில்லை. எட்டாவது இடத்தில் தற்போது களம் இறங்குவார் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் கடந்த சீசனில் இறுதியாக களமிறங்கி வேகப்பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்ட தோனி இந்த முறை இறுதி ஓவர்களை சுழற் பந்துவீச்சாளர்கள் வீசியதால் களமிறங்கவில்லை.
இந்த நிலையில் வழக்கமாக சிவம் தூபேவிற்கு பிறகு ரவீந்திர ஜடேஜா களமிறங்குவார். 19ஆவது ஓவரை வீசிய ரசித் கானின் ஓவரில் சிவம் துபே ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்க தயாரானார். ஆனால் அப்போது அணியின் கேப்டன் ருத்ராஜ் அவரை நிறுத்தி சமீர் ரிஸ்வியை களமிறங்க அனுப்பினார். இதன் விளைவாக ரிஸ்வி தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசினார்.
இதைத்தொடர்ந்து ஐந்தாவது பந்தையும் சிக்ஸருக்கு விளாச மொத்தம் ஆறு பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சென்னை ரசிகர்களுக்கு தனது வருகையை அதிரடியாகதெரிவித்தார். கேப்டன் ருத்ராஜின் இந்த நடவடிக்கையினால் ரிஸ்வியின் அதிரடியும் வெளிப்பட்டதோடு அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. ரவீந்திர ஜடேஜாவை நிறுத்தி அவர் ரிஸ்வி அனுப்பும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த போட்டியின் மூலம் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு தற்போது முன்னேறியுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி கேப்பிட்டல் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசாகப்பட்டினத்தில் எதிர்கொள்கிறது.

