ஐபிஎல்லைப் பொறுத்தவரை மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு மிக முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவர் களத்திற்கு உள்ளே நடக்கும் விஷயங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இந்த ஒரு விஷயம் அவர் கையை விட்டுப் போனால் இதுதான் அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் ஆக இருக்கலாம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 5 பட்டங்களைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமான அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி என்று சொல்லப்பட்டாலும், அது மட்டுமே காரணம் கிடையாது. முதலில் சென்னை அணி நிர்வாகம் வீரர்களிடையே எந்த ஒரு தலையீடும், அழுத்தமும் கொடுப்பது கிடையாது.
அணி வீரர்களை அவர்களது போக்கிலேயே இருக்க விடுவது நிர்வாகத்தின் தனிச்சிறப்பு. மேலும் களத்திற்கு உள்ளே என்ன நடந்தாலும் அதை, வெளியில் கொண்டு வர அனுமதிப்பதில்லை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் சரிசமமான மரியாதை கொடுக்கப்படும். இந்த வீரர் ஏற்றம், இந்த வீரர் இறக்கம் என பாரபட்சம் பார்ப்பது கிடையாது.
ரசிகனின் பார்வையிலேயே சென்னை அணி ஒரு குடும்பம் போல் தெரிவதால், சென்னை அணியில் விளையாடும் அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் தோனி நம்பி ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால், குறைந்தது அவர் ஐந்து அல்லது ஆறு போட்டியில் கட்டாயம் விளையாடுவார். எனவே அவரது நம்பிக்கை எந்த விதத்திலும் களையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
ஒரு வீரர் அணியில் விளையாட வில்லை எனில் ஒருவேளை அவர் அடுத்த சீசனில் இறக்கப்படலாம் அல்லது அவருக்கான வேலை என்ன என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். எனவே இப்படி ஒரு வெற்றி பார்முலாவை தோனி அணியில் பழக்கப்படுத்தி இருக்கிறார். அது பின்வரும் காலங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.எனவே இப்படி இருக்கையில் மகேந்திர சிங் தோனிக்கு எந்த விஷயம் பிரச்சினையாக இருக்கக் கூடும் என்று அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்
“தோனி வீல் சேரில் விளையாட வந்தாலும் சென்னை அணி அவரை விளையாட அனுமதிக்கும். யாரும் எதுவும் சொல்லப் போவது கிடையாது. தற்போது அவர் மேற்கொண்டிருக்கும் பேட்டிங் பயிற்சியைப் பார்க்கையில் அவருக்கு பேட்டிங் ஒரு பிரச்சினையாக இருக்காது என்றே தெரிகிறது. ஆனால் கடந்த சீசனில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளார்.
எனவே விக்கெட் கீப்பிங் செய்வதே அவருக்கு பிரச்சனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தோனிக்கு மிகவும் பிடித்தமான விஷயம் ஸ்டம்புக்கு பின்னால் நின்று அணியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதையே அவர் எப்போதும் திரும்புவார். எனவே எப்போது அவருக்கு விக்கெட் கீப்பிங் பணி பிரச்சினையாக இருக்கிறதோ அதுவே அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் ஆக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

