டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில், உலகக் கோப்பை காண இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், அதில் விராட் கோலி வருகிற ஐபிஎல்லில் அவரது பங்களிப்பைப் பொறுத்தே தேர்வு செய்யப்படுவார் என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு கூறியது என்று தகவல் வெளியாகியது.
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி, தனக்கு மகன் பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்த நிலையில் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகினார். இந்நிலையில் குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்த விராட் கோலி ஐபிஎல்லில் பங்கு பெறுவது சந்தேகம்தான் என்று கவாஸ்கர் கூறிய கருத்து சர்ச்சையானது.
தற்போது அந்த சர்ச்சையினை பொய்யாக்கும் வகையில் விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பியுள்ள புகைப்படம் வெளியாகி விராட் கோலி வரும் ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவது உறுதியாகியுள்ளது. விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதிலிருந்து அவருக்கும் பிசிசிஐக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விராட் கோலி டெஸ்ட் தொடருக்கு மட்டும் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் கங்குலியின் அழுத்தம் காரணமாக ரோகித் சர்மா கேப்டனாக ஏற்றார் என்று தகவல் வெளியாகியது. ஆனால் இதனை கங்குலி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதனால் விராத் கோலி தற்போது இந்திய அணியில் ஒரு வீரராக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விராட் கோலி வருகிற டி20 உலக கோப்பைத் தொடரிலிருந்து நீக்குமாறு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடமும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடமும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சத்திய பிரகாஷ் என்ற பத்திரிக்கையாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது விராட் கோலி டி20 போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அதிக ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்கள் குவிப்பதில்லை என்று விமர்சனம் எழுந்தது. எனவே இதை வைத்து விராட் கோலியை உலகக் கோப்பை டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜெய்ஷா தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கூறியதாகவும், அஜித் அகர்கர் சக உறுப்பினர்களிடம் கூறி சம்மதிக்க வைக்க வேண்டும் எனவும் ஜெய்ஷா கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு அஜித் அகர்தர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கூறியதாகவும், ஆனால் ரோகித் சர்மா “என்ன நடந்தாலும் சரி விராட் கோலி கண்டிப்பாக டி20 அணியில் இருக்க வேண்டும்” என திட்டவட்டமாக மறுத்துவிட்டமாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து எதுவும் தெரியவில்லை. எனவே விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், உலகக்கோப்பை டி20 அணியிலும் இடம் பெறுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

