நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து லக்னோ அணியின் உரிமையாளர் கேப்டன் கே எல் ராகுலை மைதானத்திலேயே திட்டியது தற்போது விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி பத்து ஓவர்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில் லக்னோ அணியின் தோல்வி அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை கடுமையாக கோபமடைய வைத்துள்ளது. இதனால் மைதானத்திலேயே அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் சஞ்சீவி கோயங்கா கடுமையாக நடந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
ஒரு விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜமானது. அதை புரிந்து கொள்ள முடியாதவர்களால்தான் லக்னோ அணி நிர்வகிக்கடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வரும் லக்னோ அணிக்குதான் இந்த பிரச்சனை. இது போன்ற விஷயங்களை சென்னை, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் சிறப்பாக கையாண்டு வருகின்றன.
எனவே லக்னோ அணியும் இவர்களைப் போலவே பின்பற்ற வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் சிஇஓ என்ற ஒருவர் இருப்பார். உரிமையாளருக்கும், பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு இடையில் பாலமாக இருப்பார். அவர் அணிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பார். மேலும் அணியில் என்ன பிரச்சனை இருந்தாலும் உரிமையாளர் இவர் மூலமே கேட்டு தெரிந்து கொள்வார்.
இதனால் அணியின் உரிமையாளர் நேரடியாக வீரர்களிடையே தலையிட வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ராஜஸ்தான் அணியின் சிஇஓ மனோஜ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சண்முகம் என்று அணியின் உரிமையாளருக்கும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கும் இவர்கள் பாலமாக இருந்து வருகின்றனர்.
இதனால் அணியின் உரிமையாளர்கள் யாரும் பெரும்பாலும் வீரர்களை சந்திப்பதே கிடையாது. எடுத்துக்காட்டாக சன்ரைசர்ஸ் அணியின் அணியின் உரிமையாளர் காவியா, கே கே ஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் உள்ளிட்ட யாரும் வீரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. என்ன பிரச்சனை இருந்தாலும் அதை சிஇஓ மூலமாகவே கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் லக்னோ அணியில் அப்படி சிஇஓ என்று யாரும் இல்லாததால் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவே நேரடியாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் இடத்தில் பேசி வருகிறார். இது பின்னாளில் வீரர்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

