இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்கப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணியில் தோனியும், பெங்களூர் அணியில் கோலியும் விளையாட இருப்பதால் இவ்விரு வீரர்களின் ரசிகர்கள் மைதானம் முழுக்க அலங்கரிப்பார்கள். அதுவும் சமூக வலைதளங்களில் இவ்விரு அணிகளுக்கும் இடையே வாய்க்கால் தகராறு சண்டை அவ்வப்போது நடைபெறுவதால், இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
பெங்களூர் அணியில் விராட் கோலி ஏற்கனவே கேப்டன்சியை விட்டு ஒதுங்கி விட்டதால், இந்த ஐபிஎல் தொடரை மிகவும் நிதானமாக எதிர் கொள்வார். அதே வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் இவரது செயல்பாட்டினைப் பொருத்தே
டி20 உலக கோப்பைக்கு பிசிசிஐ தேர்வு செய்யும் என்பதால் இந்தத் தொடர் விராட் கோலிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சென்னை அணியைப் பொறுத்தவரை கடந்த சீசனில் காயத்துடனே முழு தொடரிலும் விளையாடிய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இம்முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு மிகவும் பிட்டாக வந்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இவர் பேட்டிங் செய்யும் வீடியோக்களே இதற்கு உதாரணம். இருப்பினும் தற்போது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று பலர் கருதுகின்றனர்.
ஏனெனில் இந்த சீசன் முடிந்து அடுத்த சீசனில் மெகா ஏலம் வருவதால் தோனியை மெகா ஏலத்திற்கு கொண்டுவர மாட்டார்கள் என்றே தெரிகிறது. மேலும் சமீபத்தில் தோனியே தனது சமூக வலைதளத்தில் புதிய ரோலுக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளதால் இவர் கேப்டனாகவே இந்த தொடரில் ஆடுவாரா?அல்லது இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்பது இதற்குப் பின்னர்தான் தெரிய வரும். அல்லது இம்பேக்ட் பிளேயர் என்னும் விதியின் மூலம் தோனி ஏதேனும் மாற்றங்கள் செய்வாரா என்பதையும் எதிர்பார்க்கலாம். எனவே இது குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறுகையில்
“தொடரின் நடுவே தோனி அமர்ந்துகொண்டு இம்பாக்ட் பிளேயர் விதியின் மூலம் வேறு யாரையாவது கேப்டனாக உள்ளே கொண்டு வர வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் கிடைக்கப் போகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் தொடரின் ஆரம்பத்தில் அவர் நிச்சயம் கேப்டனாக செயல்படுவார். அவர் கேப்டனாக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும்.
தோனி உடல் தகுதியில் 10% இருந்தால் கூட தொடரில் விளையாட முடிவு செய்வார். கடந்த சீசனில் காயத்துடனே முழு தொடரிலும் விளையாடினார். எனவே அவருக்கு காயம் என்பது ஒரு பொருட்டல்ல. அவர் வாழ்வில் பல காயங்களைக் கடந்து வந்திருக்கிறார். எனவே இந்த சீசன் முழுக்க அவர் விளையாடுவார்” என்று அம்பத்தி ராயுடு கூறியிருக்கிறார்.

