ஐபிஎல்-லைப் பொருத்தவரை சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளுமே நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ள வெற்றிகரமான அணிகள். இதில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளன. ஆனால் பெங்களூர் அணியால் இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை.
விராட் கோலி, ஏபிடி, மேக்ஸ்வெல் என்று நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தாலும் முக்கியமான நேரத்தில் ஏற்படும் குளறுபடிகளின் காரணமாக பெரும்பாலும் பிளே ஆப் அல்லது லீக்கிலேயே பெங்களூர் அணி வெளியேறிவிடும். இது விராட் கோலி கேப்டனாக இருந்த காலகட்டத்திலும் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. மேலும் பெங்களூர் அணி இந்த வீரர்கள் வேண்டாம் என்று கழட்டி விடப்பட்டவர்கள்தான் இன்று மற்ற அணிகளில் நட்சத்திர வீரர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த மூன்று வீரர்களை குறிப்பிடலாம்.
முதலாவதாக பெங்களூர் அணிக்காக முதலில் விளையாடியது சிவம் துபே. 2019ஆம் ஆண்டு பெங்களூர் அணியால் 5 கோடிக்கு வாங்கப்பட்டார். அங்கு ஓரளவு சிறப்பாக விளையாடிய சிவம் துபே, பெங்களூர் அணியால் இவரின் திறமையை முழுவதுமாக கண்டறிய முடியவில்லை. 2021ஆம் ஆண்டு இவரை கழட்டி விட அந்த ஆண்டு இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ஆல் ரவுண்டர் என்றாலும் பந்துவீச்சுக்காகவே பெரிதும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டவர். அந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல் அணி இவரை கழட்டி விட 2022ஆம் ஆண்டு சென்னை அணியில் நுழைந்தார். பின்னர் மகேந்திர சிங் தோனி இவரது ரோலை முழுமையாக மாற்றி பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். அப்போது ஆரம்பித்த அதிரடி சுழற் பந்து வீச்சாளர்கள் இவருக்கு பந்து வீசுவது என்றால் சற்று கலக்கத்தில்தான் இருப்பார்கள். அந்த அளவிற்கு சிவம் தூபே தற்போது சிக்சர் துபேவாக மாறியிருக்கிறார்.
இரண்டாவதாக ஹைதராபாத் அணியில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் ஹென்ரிக் கிளாசன். இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில் தற்போது ஆரஞ்சு தொப்பி அவரின் கைவசம் இருக்கிறது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மும்பை அணிக்கு எதிராக அவர் ஆடிய அதிரடி ஆட்டம். 34 பந்துகளை எதிர் கொண்ட அவர் 80 ரன்களை விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். இவரும் முதலில் ஆர்சிபி அணிக்காக விளையாடியவர்தான் இவரை ஆர்சிபி நிர்வாகம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டது.
மூன்றாவது வீரர் கடந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு வில்லனாகவும், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி மற்ற அணிகளுக்கு எமனாகவும் திகழும் டிராவிஸ் ஹெட். உலகக் கோப்பை இறுதி போட்டியில் இவர் விளையாடிய அதிரடிக்காக ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. தனது முதல் போட்டியிலேயே மும்பை அணியை எதிர்கொண்ட இவர் 63 ரன்கள் விளாசி ஹைதராபாத் அணி வெற்றி பெற பெரும் பங்காற்றினார். இவரும் முதலில் ஆர்சிபி அணிக்காக விளையாடியவர். இவரையும் ஆர்சிபி அணி சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டது.
பதினாறு ஆண்டுகளாக முயற்சி செய்தும் இன்னமும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வரும் ஆர்சிபி அணி இந்த முறையாவது கோபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே மகளிர் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், ஆடவர் அணி மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

