இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியும் தழுவி நல்ல நிலையில் இருக்கிறது. இந்த அணியில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர் சிவம் தூபே யுவராஜ் சிங் உடன் ஒப்பிட்டு பேசுவது சரியானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
ஆல் ரவுண்டரான சிவம் துபே முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு பெங்களூர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இவர் பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். பின்பு அந்த அணியில் இருந்தும் கழட்டி விடப்பட்டபோது இவரின் திறமையை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில ஆண்டுகளுக்கு முன்பாக இவரை ஏலத்தில் எடுத்தது.
பவர் ஹிட்டர் ஆன இவரை நம்பர் 4ல் களம் இறக்கி சுழற்பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்க விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் சிவம் தூபே இந்த ஆண்டிலும் அதிரடியாக விளையாடி 9 போட்டிகளில் இதுவரை 350 ரன்கள் குவித்துள்ளார்.
இவரது திறமையை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியமும் டி20 உலக கோப்பை அணியில் இவரை தேர்வு செய்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிவம் டுபேவின் பேட்டிங் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் போன்று இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அப்படி ஒரு கருத்து முட்டாள்தனமானது என்று கூறி இருக்கிறார்.
அது குறித்து சிவம் துபே கூறும் பொழுது
“யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று நினைக்கிறேன். அவருக்கு ஒரு பாணி இருக்கிறது எனக்கு ஒரு பாணி இருக்கிறது. நான் எனது பாணியில் விளையாடி வருகிறேன். ஆனால் அவருடைய பாணியும், என்னுடைய பாணியும் ஒரு சில இடங்களில் ஒற்றுமையாக இருக்கலாம். நான் இப்போது என்னுடைய விளையாட்டில் மட்டுமே முழு கவனமும் செலுத்தி வருகிறேன்.
நான் அதிரடியாக விளையாடும் போது அது குறித்து யோசிக்கவில்லை. அணிக்கு என்ன தேவையோ அதன்படி விளையாடுவது என்னுடைய திட்டமாக இருக்கிறது. அணியில் கேப்டன் நம்மை நம்பினால் மட்டும் போதும். நாம் அருமையாக விளையாடுவதற்கான வாய்ப்பு தானாகவே உருவாகும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இதுதாண்டா டீம்.. கோப்பையை ஆஸ்திரேலியா பேர்ல எழுதுங்க.. வெறித்தனமான டி20 உலக கோப்பை அணி வெளியீடு.!!
வருகிற டி20 உலக கோப்பையில் இவர் இந்திய அணிக்காக எவ்வாறு செயல்பட போகிறார்? என்பதே தற்போது அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இவர் நன்றாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் சார்பாக அனைவரும் வாழ்த்துவோம்.

