இண்டர்நேஷனல் மாஸ்டர் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியின் கேப்டனாக வாட்சனும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிரையன் லாராவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் லாரா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் ஷேன் வாட்சன் – பென் டங்க் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜெரோம் டெய்லர் வீசிய முதல் பந்திலேயே வாட்சன் பவுண்டரி அடித்து தொடங்க, எட்வர்ட்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே 2 சிக்ஸ் விளாசி 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. பென் டங்க் – வாட்சன் இருவரும் பவுண்டரி, சிக்சர்களிலேயே டீல் செய்தனர். இதனால் 3 ஓவர்களில் 33 ரன்களை விளாசிய போது, டங்க் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அரைசதம் எட்டிய வாட்சன்
பின்னர் வந்த ஃபெர்குசன் நிதானமாக ஆடிய கம்பெனி கொடுக்க, வாட்சன் மொத்த கட்டுப்பாட்டையும் எடுத்து கொண்டார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர், பவுண்டரி அடிக்கப்பட, 6 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 54 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற வாட்சன், 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
9வது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி, 2 சிக்ஸ் விளாசி 21 ரன்களை விளாசி தள்ளினார். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 107 ரன்களாக உயர்ந்தது. பின்னர் அதிரடியை தொடர்ந்த வாட்சன் 93 ரன்களில் இருந்த போது ஒரு சிக்ஸ், ஒரு ரன் எடுத்து 48 பந்துகளில் சதத்தை எட்டினார். 28 பந்துகளில் அரைசதத்தை எட்டிய வாட்சன், அடுத்த 20 பந்துகளில் சதத்தை எட்டி ஆச்சரியம் கொடுத்தார்.
ஷேன் வாட்சன் சாதனை
சிறப்பாக ஆடிய அவர் 52 பந்துகளில் 9 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இவரின் அதிரடியான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை விளாசி இருக்கிறது. இந்த சதத்தின் மூலமாக ஷேன் வாட்சன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இண்டர்நேஷனல் மாஸ்டர் தொடரில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ஷேன் வாட்சன் பெற்றுள்ளார். 43 வயதான ஷேன் வாட்சன் இப்போதும் கூட 130 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்துகளை அசால்ட்டாக சிக்சருக்கு அனுப்பிய சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

