2025 ஆம் வருட ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவில் வைத்து நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் என்ற சாதனையைப் படைத்தனர். மேலும் ஏராளமான இளம் வீரர்களும் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த மெகா ஏலம் பல இளம் வீரர்களுக்கும் திருப்புமுனையாக அமைந்தது.
ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் போன்ற இளம் வீரர்களும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தால் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த வரிசையில் பீகாரைச் சேர்ந்த 13 வயது இளம் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்சி என்ற 13 வயது இளம் வீரரை 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும் வைபவ் சூர்யவன்சி பெற்றிருக்கிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் 2 அதிரடி அரை சதம் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களையும் விமர்சகர்களையும் தன் பக்கம் திருப்பினார்.
இந்நிலையில் 13 வயது வீரரை தங்கள் அணிக்கு தேர்வு செய்ததற்கான காரணத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சமீபத்திய நேர்காணலில் விளக்கி இருக்கிறார். இது தொடர்பாக ஆர்சிபி மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஏபி டிவில்லியர்ஸுடன் கலந்து கொண்ட நேர்காணலில் சஞ்சு சாம்சன் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், ” சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அண்டர் 19 டெஸ்ட் போட்டியின் ஹைலைட்ஸ் பார்த்தேன். அந்தப் போட்டியில் சூர்யவன்சி 60 அல்லது 70 பந்துகளில் சதம் எடுத்தார்” என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய சாம்சன் “அந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்சி விளையாடிய சில ஷாட்கள் நம்ப முடியாத வகையில் அற்புதமாக இருந்தது. மேலும் அவரது ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நிர்வாகிகளும் பார்த்தனர். இது போன்ற அற்புதமான இளம் வீரர்களை எங்கள் அணிக்கு தேர்வு செய்து வரும் காலங்களில் அவர்களது வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்பதை காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். இதனை எங்கள் அணியின் நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது” எனவும் தெரிவித்தார்.
தங்கள் அணி இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவது குறித்து பேசிய சாம்சன் ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இதனை தொடர்ந்து செய்து வருகிறது. ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோரும் இளம் வீரர்களாக எங்கள் அணியால் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் சாம்பியன் வீரர்களாக இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். எங்கள் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவது முக்கியம்.. எனினும் இது போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்கள் இந்திய அணிக்கு விளையாடுவதும் எங்கள் அணிக்கு பெருமை தான்” எனக் கூறினார்.

